இண்டி கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றி தனி மரமாக்க வேண்டும் - ஆம் ஆத்மி
இண்டி' கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றி தனிமரமாக்க வேண்டுமென ஆம் ஆத்மி குரல் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணி அமைத்தன. அதற்கு 'இண்டி' என்றும் பெயரிட்டது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்காமல் ராகுல் காந்தி சில கருத்துகளை தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால் ஆம் ஆத்மிக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.
இதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு தேச விரோதி என, காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அஜய் மக்கான் மீது 24 மணிநேரத்தில் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆம் ஆத்மி கெடு விதித்துள்ளது. அவ்வாறு எடுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.