இந்தியாவிடம் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கேட்கும் வங்கதேச அரசு - சிறப்பு தொகுப்பு!
மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் வங்கதேசம், தற்போது இந்தியாவிடம் உதவி கேட்டு கெஞ்சும் நிலைக்கு வந்துள்ளது. சொந்த மக்களுக்கு உணவு வழங்க முடியாத நிலையில், இந்தியாவிடம் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
ஷேக் ஹசீனாவை பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து நாட்டை விட்டு வெளியேற்றியதில் இருந்து வங்கதேசம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, வங்க தேசம் உணவுப் பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கிறது. சமீப வாரங்களாக, அந்நாட்டில் கடுமையான உணவு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம், வங்க தேச உணவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன் படி, நாட்டில் 1.1148 பில்லியன் டன் உணவு தானியங்கள் மட்டுமே இருப்பில் உள்ளன. இதில் 7 லட்சத்து 42 ஆயிரம் டன்னுக்கு அரிசி உள்ளது.
நடப்பு நிதியாண்டில் இதுவரை 2.6625 டன் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் அரிசி மட்டும் 54,170 டன் அளவாகும். தற்போது எப்போதும் இல்லாத வகையில் வங்கதேசத்தில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தை பொருத்தவரை அரசு சார்பில் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கும் ரேஷன் திட்டம் உள்ளது. வங்க தேசத்தில் பிரதானமான உணவு அரிசியாகும். வங்க தேசத்தின் உணவு இறக்குமதியில் அரிசியே முதலிடத்தில் உள்ளது. வங்க தேசத்துக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக மியான்மர் உள்ளது.
வங்க தேச வெளியுறவு அமைச்சர், மியான்மரில் இயங்கிவரும் அரக்கான் இராணுவத்தை தங்கள் நாடு அங்கீகரிக்காது என்றும், வங்கதேசத்தில் வசிக்கும் சுமார் ஒரு மில்லியன் ரோஹிங்கியா அகதிகளை மியான்மர் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனாலேயே, அரக்கான் இராணுவம் வங்க தேசத்தை உணவு பற்றாகுறையில் தள்ளியுள்ளது.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் உள்ள ஆயுதக் குழுவான அரக்கான் ராணுவம், சமீபத்தில் மியான்மர்-வங்கதேச எல்லையில் உள்ள முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
கடந்த வாரத்தில், வங்க தேச எல்லையில் உள்ள கடைசி மியான்மர் இராணுவ புறக்காவல் நிலையத்தை அரக்கான் இராணுவம் கைப்பற்றியது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து 270 கிலோமீட்டர் எல்லையை தன்வசமாகியது. அரக்கான் இராணுவம் மோங்டோவின் முக்கிய துறைமுகத்தையும், முக்கிய சுங்க சாவடிகளையும் கைப்பற்றி விட்டது. அதனால், மியான்மரில் இருந்தும் வங்க தேசத்துக்கு அரிசி ஏற்றுமதி முற்றிலுமாக தடுக்கப் பட்டு விட்டது.
சமீபத்தில், வங்கதேசத்தின் நிதி ஆலோசகர் சலிஹுதீன் அஹமது தலைமையில் பொருளாதார விவகார ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி இந்தியாவில் உள்ள பகாடியா பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து ஒரு டன் அரிசியை 456.67 அமெரிக்க டாலருக்கு வாங்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது.
வங்கதேசம் இந்திய தனியார் நிறுவனத்திடம் அரிசி கேட்டு இருந்தாலும் கூட வெளிநாடுகளுக்கு பெரும் அளவு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யும்போது அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியம்.
இந்தியாவுக்கு எதிரான மோதல் போக்கைக் கடை பிடித்து வரும் வங்க தேசத்துக்கு இந்தியா அரிசியை அனுப்ப அனுமதி வழங்குமா என்ற கேள்வியும் வங்க தேச அரசுக்கு உள்ளது. ஒருவேளை அரிசி வழங்காவிட்டால் அது வங்கதேசத்துக்கு பெரிய பிரச்சனையாக மாறும். ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கும் வங்க தேசத்துக்கு உணவு பற்றாக்குறை மேலும் பிரச்சனையாகும். எனவே தான், 50,000 டன் அரிசி வழங்கும்படி இந்தியாவிடம் வங்க தேசம் கையேந்தி நிற்கிறது.