இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதுகாப்புப் படையின் பங்களிப்பு மிக முக்கியம்! : அமித் ஷா
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வகையில், எல்லை பகுதிகளுக்கென தனியாக, 'ட்ரோன்' எதிர்ப்பு படைப் பிரிவை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
எல்லை பாதுகாப்பு படையின் 60வது நிறுவன நாள் விழா, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது, 2047-ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக விளங்க, பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு மிக முக்கியம் என தெரிவித்தார்.
எல்லையை பாதுகாக்க பல நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எல்லையை பாதுகாக்க எல்லையோர பகுதிகளுக்கென தனியாக ட்ரோன் எதிர்ப்பு முறையை உருவாக்கும் முயற்சி நடந்து வருவதாகவும் தகவலளித்தார்.