இந்தியாவின் வாகன தொழில், எதிர்காலத்திற்கு தயாராக உள்ளது : பிரதமர் மோடி
இந்தியாவின் வாகன தொழில், எதிர்காலத்திற்கு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் போக்குவரத்து வாகனங்கள் தொடர்பான போக்குவரத்து கண்காட்சி டெல்லி, நொய்டா உள்ளிட்ட 3 இடங்களில் நடைபெறுகிறது.
டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான 100 புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,
5 நாட்கள் நடைபெறும் வாகன போக்குவரத்து கண்காட்சியை ஏராமானோர் வந்து பார்வையிடுவார்கள் என தெரிவித்தார். கண்காட்சியில் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறிய அவர், இந்தியாவின் வாகனத் தொழில் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், ரத்தன் டாடா மற்றும் ஒசாமு சுசுகி ஆகியோரை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இருவரின் மரபு, நாட்டின் முழு போக்குவரத்து துறைக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.