செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்தியாவுக்கு அடித்த யோகம் : எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு  ட்ரம்ப் அளித்த வரி விலக்கு!

06:05 AM Apr 17, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஸ்மார்ட்போன், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கு அளித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது, இந்தியாவுக்குச் சாதகமான வரி விலக்கு என்று இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதாகக் கூறி, அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பர வரியை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். உலக அளவில் ஒரு வர்த்தகப் போரைத் தொடங்கிய அமெரிக்கா, சீனா மீது அதிக வரி விதித்தது. அமெரிக்கா மீது சீனாவும் அதிக வரி விதித்தது.

இதனையடுத்து, சீனப் பொருட்களின் மீதான வரியை 145 சதவீதம் அதிகரிப்பதாகவும், மற்ற நாடுகள் மீதான வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்திருந்தார். பதிலுக்கு அமெரிக்கா மீது 125 சதவீதம் வரியைச் சீனா அறிவித்தது.

Advertisement

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும்,சீனாவும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை 6 மாதம் தொடர்ந்தாலே, இருநாடுகளின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிப்படையும். அதனால் உலக பொருளாதாரமும் சீர்குலையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

கூடுதலாக,இதன் காரணமாக,உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்குக் குறையும் என்றும், உலக நாடுகளுக்கான ஏற்றுமதி, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறலாம் என்றும் கூறியுள்ளனர்.

தொழில்துறையைப் பொறுத்தவரை, மின்னணுப் பொருட்களின் உலகளாவிய உற்பத்தியில் 70 சதவீதம் சீனாவிடம் உள்ளது. பெரும்பாலான மின்னணுப் பொருட்களை அமெரிக்கா உற்பத்தி செய்வதில்லை. மாறாக அதிகமாகச் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது.

145 சதவீத வரி விதிப்பால், சீன பொருட்களுக்கான அமெரிக்க சந்தை ஏறத்தாழ மூடப்பட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும். இதனையடுத்து, தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை விற்க, இந்தியாவை நாடும் நிலை சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை, இந்தியா போன்ற நாடுகளிடம் குறைந்த விலைக்கு விற்க அந்நாடு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் செல்போன், பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆப்பிள்,மைக்ரோசாஃப்ட்,கூகுள் போன்ற அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களை ஆதரிக்கவும், பொருட்களின் விலை உயர்வு குறித்த அமெரிக்கர்களின் அச்சத்தைப் போக்கவும், கணினி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விலக்கு அறிவித்துள்ளார்.

சீனாவுக்குப் பரஸ்பர வரி மட்டுமே நீக்கிய ட்ரம்ப்,  இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கு  ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து ஐபோன்கள், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி இல்லை என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மின்னணு உற்பத்தித் துறைக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி மையமாக இந்தியா உள்ளது. ஆப்பிள் இந்தியாவில் அதிக  வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனமாகவும் உள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் ஒன்றாகவும் ஐபோன் உள்ளது.

கடந்த ஆண்டில், ஐபோன் ஏற்றுமதியின் மதிப்பு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாயாகும்.  இந்த ஆண்டில், இதுவரையில்,  மொத்த ஸ்மார்ட் போன் ஏற்றுமதியின் மதிப்பு  2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 55 சதவீதம் அதிகமாகும். இது, உலகளாவிய மின்னணு சந்தையில் இந்தியா வளர்ந்து வருவதையே  காட்டுகிறது.

250 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய மின்னணு பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது. இதில், சுமார் 30 சதவீதம் சீனாவில் இருந்து  இறக்குமதி ஆகிறது.  இப்போது ட்ரம்பின் வரி விலக்கால் அமெரிக்காவுக்கான இந்திய மின்னணு பொருட்களின்  ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி மையம் மற்றும் விநியோகச் சங்கிலி  சீனாவில் தான் அதிகமாக உள்ளது. சீனா மீதான அதிக வரியால், ஐபோன்களின் விலைகள் அமெரிக்காவில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ட்ரம்பின் வரிவிலக்கு அறிவிப்பால், மின்னணுப் பொருட்களின் விலை சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் விலையை விட இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்தால், 20 சதவீதம் குறைவாக இருக்கும் என்று India Cellular and Electronics Association( ICEA ) தெரிவித்துள்ளது.

Advertisement
Tags :
americausataxdonald trump 2025A blow to India: Trump's tax exemption for electronicsFEATUREDMAINIndia
Advertisement