இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம் - வீரர்கள் தீவிர பயிற்சி!
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடர் நாளை பெர்த் நகரில் தொடங்குகிறது.
Advertisement
இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகளில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்த் டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஆஸ்திரேலிய ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ரசிகர்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கெளதம் காம்பீர் ஆட்டோகிராப் அளித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், பல்வேறு சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அஸ்வின் இதுவரை 194 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பிரமாண்ட உலக சாதனையை அவர் படைப்பார். இந்த பட்டியலில் 187 விக்கெட்டுகளுடன் நாதன் லயன் 2-வது இடத்திலும், கம்மின்ஸ் 175 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இதனிடையே இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக நிதிஷ் ரெட்டி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.