இந்தியா இல்லாவிட்டால் வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது! : கரு.நாகராஜன்
வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக்கோரி சென்னை எழும்பூரில் இந்து மீட்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து, வங்கதேச இந்து மீட்பு குழு சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பாஜகவினர் பங்கேற்று வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக் கோரி முழக்கமிட்டனர்.
போராட்டத்தின்போது பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், இந்தியா இல்லாவிட்டால் வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது என தெரிவித்தார். வங்கதேசத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் இந்துக்கள் தான் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வங்கதேசத்திலுள்ள இந்துக்களுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.
வங்கதேச இந்துக்களை பாதுகாக்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் திரைப்பட சண்டை பயிற்சியாளரும், பாஜக பிரமுகருமான கனல் கண்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு யாரும் துணை நிற்காதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்துக்களுக்காக கைது செய்யப்படுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
போராட்டத்தில் வேலூர் இப்ராஹிம் பங்கெடுத்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர், இந்துக்களுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை திமுக அரசு கைது செய்வது கண்டிக்கத்தக்கது என கூறினார்.
இதனையடுத்து, அங்கு கூடியிருந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கைது செய்த போலீசார் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர், உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டத்தை கூட நடத்த முடியாத சூழல் தமிழகத்தில் உள்ளதாக குற்றம் சாட்டினார். இந்துக்களுக்கு எதிரான அரசாக திமுக உள்ளதாகவும் அவர் கூறினார்.