இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
பெர்த் டெஸ்ட் போட்டியில் 295 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது.முதல் இன்னிங்சில், இந்தியா 150 ரன்களுக்கும், ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கும் சுருண்டண. இதையடுத்து, 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்தது.
534 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 3-வது நாள் ஆட்டத்தில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா, ஆட்ட நேர முடிவில் 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில், 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் கவாஜா 4 ரன்னிலும், ஸ்மித் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் 89 ரன் எடுத்திருந்த நிலையில், பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் மிட்செல் மார்ஷை 47 ரன்னில் நிதிஷ் ரெட்டி வீழ்த்தினார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால், 238 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பெர்த்தி நகரில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.