இந்திய ஆயுதங்களுக்கு மவுசு! : இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் அமெரிக்கா
ராணுவ வீரர்களுக்கான பூட்ஸ் முதல் பிரமோஸ் ஏவுகணை வரை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவின் இராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில், முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே பிரான்ஸும், அர்மேனியாவும் உள்ளன. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
புவிசார் அரசியல் மாற்றம் காரணமாக, ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் என உலகில் போர் சூழல் உருவாகியுள்ளது. வளர்ந்த நாடுகள் தொடங்கி வளரும் நாடுகள் வரை தங்கள் ராணுவப் பலத்தை நவீனமயமாக்கி வருகின்றன. இதற்காக, கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே தங்கள் ராணுவத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளன. இதனால் ஒவ்வொரு நாட்டுக்கும் ராணுவத் தளவாடங்கள் உட்பட அதிநவீன ஆயுதங்களின் தேவைகளும் கூடியுள்ளன.
பிரதமர் மோடியின் சுய-சார்பு இந்தியா திட்டமான 'மேக் இன் இந்தியா'வின் அடிப்படையில், மத்திய அரசு, ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்கள், கவச வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
தேஜஸ் இலகு ரக போர் விமானங்கள், டோர்னியர்-228 விமானங்கள், ஆகாஷ் ஏவுகணைகள், பினாகா ராக்கெட்டுகள், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், நவீனப் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், தனுஷ் பீரங்கி, எம்பிடி அர்ஜூன் டாங்க், இலகு ரக பீரங்கிகள், ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ரேடார்கள், ராணுவத் தளவாட மென்பொருட்கள், ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை உள்நாட்டில் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுடன் சேர்ந்து தனியார் நிறுவனங்களும் ராணுவத் தளவாட தயாரிப்பில் இறங்கின. எளிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் ஏற்ப அனுமதி விதிகளும் மாற்றியமைக்கப் பட்டன.
இதன் பலனாக, ராணுவத் தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 60 சதவீதமாகவும் , பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு 40 சதவீதமாகவும் மாறின. அதிமுக்கிய ராணுவத் தளவாட தயாரிப்புகளில் பொதுத் துறை மற்றும் தனியார் துறை இரண்டும் இணைந்து செயல்படுகின்றன.
இந்திய ராணுவத் தளவாடங்களை சந்தைப்படுத்த பல்வேறு இராணுவக் கண்காட்சிகளும் நடத்தப்பட்டன. இதன் மூலம் இந்திய ராணுவத் தளவாட தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உலக நாடுகளைச் சென்றடைந்தன.
இந்தியாவின் இராணுவத் தொழில்துறையில்,16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட சுமார் 430 க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 16,000 நடுத்தர மற்றும் சிறிய ரக தொழில் நிறுவனங்களும் ராணுவத் தளவாட பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன
இந்தியாவின் இராணுவ தளவாட உற்பத்தியின் மதிப்பு, கடந்த பத்தாண்டுகளில், முன்பு இருந்ததை விட, 2014- மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவின் இராணுவ தளவாட ஏற்றுதி, கடந்த 10 ஆண்டுகளில் 21 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த 2022-23-ம் நிதியாண்டில் நாட்டின் ராணுவத் தளவாட ஏற்றுமதி 15,920 கோடி ரூபாயாக இருந்தது. 2023-24-ம் நிதியாண்டில் இராணுவ தளவாட ஏற்றுமதி 32.5 சதவீதம் அதிகரித்து 21,083 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 50,000 கோடி ரூபாய்க்கான விண்வெளி மற்றும் இராணுவத் துறைக்கான ஏற்றுமதி இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டுக்குள் ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி மூலம் சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கான திட்டங்களை இந்தியா தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. 2028-29 ஆம் ஆண்டுக்குள், 3 லட்சம் கோடி ரூபாய் என்ற லட்சிய இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
வெடிமருந்துகள், துப்பாக்கிகள் மற்றும் குண்டு துளைக்காத ஆடைகள் மற்றும் அதிநவீன தலைக் கவசங்கள், ராணுவத்துக்கு தேவையான மின்னணு பொருட்கள், கவச வாகனங்கள், இலகுரக TURBO ENGINES, ட்ரோன்கள் மற்றும் வேகமாக தாக்க கூடிய வாகனங்கள் என ஏராளமான ராணுவத் தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
ஏவுகணைகள், பீரங்கித் துப்பாக்கிகள், ஆயுதங்களைக் கண்டறியும் ராடார்கள், ராக்கெட் அமைப்புகள், குண்டு துளைக்காத உள்ளாடைகள் மற்றும் இரவு நேரப் பார்வைக் கருவிகள் இறக்குமதிக்காக ஆர்மீனியா அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில்,இந்தியாவுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
பினாகா மல்டி-லாஞ்ச் ராக்கெட் அமைப்புகள் மற்றும் 155 மில்லிமீட்டர் பீரங்கித் துப்பாக்கிகள் போன்ற ஆயுத தளவாடங்களை ஆர்மீனியா குடியரசு பெருமளவில் இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 25 கிலோமீட்டர் தூரம் இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட முதல் ஏவுகணையான ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஆர்மீனியா வாங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது.
இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கிய பிரமோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு, ஆசியான் மற்றும் வளைகுடா நாடுகளும்ஆர்வம் காட்டியிருக்கின்றன. ஏற்கெனவே கடந்த 2022 ஆண்டு, இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு பிலிப்பைன்ஸ் 375 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட டாடா போயிங் ஏரோஸ்பேஸ் நிறுவனம், அமெரிக்காவின் போயிங் AH-64 Apache ஹெலிகாப்டர்களுக்கான முதன்மையான இயந்திரங்கள், இறக்கைகள் அல்லது வால்பகுதி அல்லாத பகுதிகளை தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும்,போயிங் 737 குடும்ப விமானங்களுக்கான பிற பொருட்களையும் ஏற்றுமதி செய்துள்ளது இந்த நிறுவனம்.
இந்தியா உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் இராணுவத் தளவாடங்களின் மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்காவே உள்ளது. இது இந்தியாவின் மொத்த இராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதியில் சுமார் 50 சதவீதமாகும். அடுத்த படியாக ,பிரான்ஸ் இந்தியாவிலிருந்து நிறைய மென்பொருள் மற்றும் மின்னணு உபகரணங்களை இறக்குமதி செய்கின்றன.