இந்திய ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் மோடி - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!
பிரதமர் நரேந்திர மோடி இந்திய ராணுவத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஓய்வூதியம் பெறும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், தங்கள் வாழ்நாள் சான்றிதழ்களை சமர்பிப்பதில் ஏற்படும் இன்னல்களையும், குறைகளையும் நிவர்த்தி செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதிய பலன்களை முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து பல்வேறு போர்களில் பங்கேற்று வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசுகளையும் அவர் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார். குறிப்பாக இந்தியாவை வல்லரசாக மாற்ற 5 கோட்பாடுகளை வகுத்து அவற்றை செயல்படுத்த முழு மூச்சுடன் பிரதமர் மோடி உழைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.