இனி அலைச்சல் இல்லை : ATM மூலம் எளிதாக PF பணம் எடுக்கலாம் - சிறப்பு கட்டுரை!
ஜனவரி முதல் வருங்கால வைப்பு நிதியான PF கணக்கில் இருந்து, நேரடியாக ATM மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி அமலுக்கு வருகிறது. ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எப்போது எடுக்கலாம்? யார் எடுக்கலாம் ? எப்படி எடுக்கலாம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF), தகுதியுள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டம், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ஓய்வூதியத்திற்கு பிறகு அதன் உறுப்பினர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதே நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் சேமிக்கப் படுகிறது. EPF கணக்கில் சேமிக்கப்படும் நிதிக்கு ஆண்டு வட்டியும் சேர்க்கப்படுகிறது. மேலும் ஓய்வு பெறும்போது, சேமித்த மொத்த பணத்தையும் ஊழியர்கள் திரும்பப் பெற்று கொள்ள முடியும்.
அவசர மருத்துவ சிகிச்சை, திருமணம், கல்வி மற்றும் வீட்டை புதுப்பித்தல் போன்ற காரணங்களுக்காக வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஓரளவு பணத்தை ஊழியர்கள் இடைக்காலத்தில் திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி சுமார் 7 கோடி பி.எஃப். கணக்குகள் உள்ளன.தற்போது, பி. எஃப். கணக்கில் பணத்தை எடுக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு குறிப்பிட்ட பணம் ஊழியரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
வருங்கால வைப்பு நிதியான பி. எஃப். கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிஎஃப் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க ஏடிஎம்களில் பயன்படுத்தக்கூடிய கார்டுகளை EPFO வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய PF - ATM வசதி பணம் எடுப்பதை மிகவும் எளிதாக்கி உள்ளது.
PF -கணக்கு உள்ளவர்கள், தங்கள் UAN எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதனுடன் தங்கள் ஆதாரை எண்ணையும் இணைக்க வேண்டும். மேலும் EPFO-ல் பதிவு செய்யப்பட்டுள்ள தங்களின் IFSC குறியீட்டுடன் வங்கி கணக்கு எண்ணையும் நிரந்தர கணக்கு எண் PAN பான் விவரங்களையும் சரியாக உறுதி செய்ய வேண்டும்.
புதிய திட்டத்தின் கீழ் வழங்கப் படும் DEBIT CARD அட்டை மூலம் , நொடியில் PF பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். இனி EPFO அலுவலகங்களுக்குச் செல்ல தேவையில்லை. பணத்தைத் திரும்ப பெறுவதற்கான நீண்ட செயல்முறைகள் இனி இல்லை. நாட்டில் உள்ள எந்த ஏடிஎம்மிலும் உடனடியாக பணத்தை எடுக்க முடியும்.
மேலும், 7 நாட்களும் 24 மணிநேரமும் ATMகளில் தங்கள் பணத்தை ஊழியர்கள் எடுக்க முடியும். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட எந்த நேரத்திலும் தங்கள் PF பணத்தை இதன் மூலம் எடுக்க முடியும். அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் அவசர சூழ்நிலைகளில் பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும்.
வருங்கால வைப்பு நிதியில் (PF) குறிப்பிட்ட நோக்கங்களுக்காக EPFO போர்ட்டலில் இருந்து 90 சதவீதம் வரை பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றாலும், திரும்பப் பெறுவதற்கான காரணம் மற்றும் சேவை ஆண்டுகளைப் பொறுத்து ஊழியர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
குறைந்தபட்சம் ஐந்து வருட சேவையை முடித்த பிறகு 90 சதவீதம் வரை PF பணத்தை,வீடு வாங்குவதற்கோ அல்லது கட்டுவதற்கோ திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆறு மாத அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படிக்கு சமமான தொகையை அவசர மருத்துவ சிகிச்சைக்காக திரும்பப் பெற்று கொள்ள முடியும். ஏழு வருட சேவையை முடித்த பிறகு 50 சதவீத பணத்தை கல்வி அல்லது திருமணச் செலவுக்காக பெற்று கொள்ள முடியும்.
54 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் 90 சதவீத நிலுவைத் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், ஊழியர்களின் கணக்குடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் படி, இறந்த EPFO உறுப்பினர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு அதிகபட்சமாக 7 லட்சம் ரூபாய்க்கான காப்பீட்டுப் பலனை ஏடிஎம் மூலமாகவும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஏடிஎம்-மில் PF பணத்தை எடுக்கலாம் என்ற EPFO இன் புதுமையான நடவடிக்கை, இந்தியாவில் சமூகப் பாதுகாப்புச் சேவைகளில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.