செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இன்ஜின் TO பெட்டிகள் வரை ஏற்றுமதியில் புதிய சாதனை : உச்சத்தில் இந்திய இரயில்வே!

02:14 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

உலகளாவிய உற்பத்தி அளவில் மட்டுமில்லாமல், ஏற்றுமதியிலும் இந்திய இரயில்வே சாதனை படைத்து வருவதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  பெருமிதம் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு  செய்தி தொகுப்பு.

Advertisement

இந்தியாவின் ரயில்வே துறை, உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்தியாவில் உள்ள மொத்த ரயில்வே பாதைகள் 1,15,000 கிலோ மீட்டர் நீளமாகும். சுமார் 7,349 நிலையங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் 12,617 பயணிகள் ரயில்கள் மற்றும் 7,421 சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில் பெட்டிகள் உற்பத்தி மற்றும் சேவைகளில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்திய ரயில்வே பல நாடுகளுக்கு ரயில் பெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் இந்திய ரயில்வேயின் குறிப்பிடத்தக்க சாதனைகள், நிதி நிலைத்தன்மை மற்றும் பயணிகள் மானியங்கள் பற்றி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவையில் விவரித்துள்ளார்.

Advertisement

இந்த ஆண்டு இந்தியாவில் 1,400 ரயில் என்ஜின்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த உற்பத்தியை விட இது அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டில் 1.6 பில்லியன் டன்கள் சரக்குகளை இந்திய இரயில்வே கையாளும் என்றும், சீனா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து உலகின் முதல் மூன்று சரக்கு கேரியர்களில் ஒன்றாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும்,சரக்குக் கப்பலில் 2,00,000 புதிய ரயில் பெட்டிகளைச் சேர்ப்பதன் மூலம் சரக்குகள் கையாளும் திறனையும் விரிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவில் தயாராகும் மெட்ரோ ரயில் பெட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்ஜினுக்குக் கீழே உள்ள இயந்திர சாதனங்கள், இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனுடன், ரயிலின் உந்துவிசை அமைப்புகள் பிரான்ஸ், மெக்சிகோ, ருமேனியா, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன.

குறிப்பாக, மொசாம்பிக், வங்க தேசம் மற்றும் இலங்கைக்கு பயணிகள் ரயில் பெட்டிகளை அதிக அளவில் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட பீகாரின் மர்ஹௌரா தொழிற்சாலையில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி, இப்போது 100-க்கும் மேற்பட்ட ரயில் என்ஜின்கள் ஏற்றுமதிக்கு தயாராக உள்ளன. பீகாரில் தயாரிக்கப்பட்ட ரயில் என்ஜின்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

2014ம் ஆண்டு, நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து, ரயில் விபத்துகள் 90 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளன. மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்த போது 698 ரயில் விபத்துக்களும், மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த போது 395 ரயில் விபத்துக்களும், மல்லிகார்ஜுன் கார்கே இருந்த காலத்தில், 381 ரயில் விபத்துக்களும் நடந்துள்ளன. இப்போது, ஆண்டுக்கு 73 ரயில் விபத்துகளே இந்தியாவில் நடக்கின்றன.

பயணிகள் போதுமான வசதிகளைப் பெறுவதையும், கட்டணங்கள் முடிந்தவரை குறைவாக இருப்பதையும் இந்திய ரயில்வே துறை உறுதி செய்துள்ளது. உதாரணமாக, 350 கிலோமீட்டர் பொது வகுப்பு பயணத்துக்கு, இந்தியாவில் 121 ரூபாய் கட்டணமாகும். அதுவே பாகிஸ்தானில் 436 ரூபாயாகவும் வங்கதேசத்தில் 323 ரூபாயாகவும், இலங்கையில் 413 ரூபாயாகவும் உள்ளது.

உலகின் மிகவும் மலிவு விலை ரயில்வே நெட்வொர்க்குகளில் இந்திய ரயில்வே முதலிடத்தில் உள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு உண்மையான பயணச் செலவு ஒரு ரூபாய் 38 பைசா ஆகும். ஆனாலும் பயணிகளிடம் 73 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

2022-23 நிதியாண்டில், பயணிகள் மானியங்களுக்காக மொத்தம் 57,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், 2023-24 நிதியாண்டில் 60,000 கோடியாக அதிகரிக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வேயின் ஆண்டு வருவாய் 2.78 லட்சம் கோடி என்றும், செலவுகள் 2.75 லட்சம் கோடி என்றும் அவர் கூறியுள்ளார்.

மொத்தத்தில், சர்வதேச ரயில்வே அமைப்பில் தன் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இந்திய ரயில்வே உருவாகி உள்ளது.

Advertisement
Tags :
FEATUREDindian rail wayMAINNew record in exports from locomotives to coaches: Indian Railways at the peak!இன்ஜின் TO பெட்டிகள்உச்சத்தில் இந்திய இரயில்வே
Advertisement