இன்ஸ்டா பிரபலம் செல்வா மீது காவல் நிலையத்தில் புகார்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட திரைப்பட துணை நடிகரும், இன்ஸ்டா பிரபலமுமான செல்வா மீது காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் துணை நடிகராக நடித்த செல்வா என்பவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது அவர், கோயில் கருவரையில் உள்ள மூலவரை வீடியோ எடுத்தும், கோயில் பிரகாரங்களில் ரீல்ஸ் வீடியோ எடுத்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், செல்வா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில் கோயிலில் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், கோயிலின் புனித தன்மையை பாதுகாக்க கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.