இபிஎஸ் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய தடையில்லை - உயர் நீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய தடையில்லை என சென்னை உயர்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து சேலம் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி தரப்பு புகார் தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல என விளக்கம் அளித்தது.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றும், இந்த புகார் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்தது.
இதையடுத்து ஆஜரான காவல்துறை தரப்பு சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே, மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது என விளக்கம் அளித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய தடையில்லை என்று உத்தரவிட்டது.
மேலும், மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்க வேண்டுமென ஆணையிட்டது.