இபிஎஸ் விழாவில் பேசிய ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை!
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய அரசு பள்ளி ஆசிரியர் மீது பள்ளிக் கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
காவிரி - சரபங்கா உபரிநீர் திட்டத்தை அமல்படுத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலத்தில் கடந்த 17-ம் தேதி விவசாய சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அரியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் சீதாராமன், விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிலையில், சீதாராமன் மீது தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியரான சீதாராமன் சரிவர பள்ளிக்குச் செல்லாமலும், மாணவர்களுக்கு பாடம் எடுக்காமலும் அதிமுக சார்ந்த கட்சி பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 13-ம் தேதி திமுக கிளைச் செயலாளர்கள் மூலம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், கடந்த 14-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலர் நேரில் விசாரணை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையின்போது அரசு பள்ளி ஆசிரியர் சீதாராமன், தாம் அதிமுக சார்ந்த விவசாய சங்கத்தில் பொறுப்பாளராக இருப்பதை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், தமிழ்நாடு குடிமுறை பணிகள் விதியின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.