இமயத்தில் உருகும் பனிப்பாறைகள் : திடீர் வெள்ள அபாயம் - ஆபத்தில் இந்தியா?
காலநிலை மாற்றம் காரணமாக உலகின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தாக்கத்தால், இமயமலைத் தொடரில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன. வேகமாக விரிவடையும் பனிப்பாறை ஏரிகளால், வெள்ள அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
Advertisement
உலகிலேயே அதிகமான பனிப் பாறைகள் இமயமலைப் பகுதியில் தான் உள்ளன. இமயமலையில் சுமார் 9000 பனிப்பாறைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை,எளிதில் அணுக முடியாத வகையில் 3,700 முதல் 4,300 மீட்டருக்கு அப்பால் உயரத்தில் அமைந்துள்ளன.
ஒரு பனிப்பாறை நிலத்தை அரிக்கிறது. பின்னர் உருகுகிறது. அரிப்பில் ஏற்பட்ட பள்ளத்தில், உருகியதால் வரும் நீர் தங்குகிறது. அவைதான் பனிப்பாறை ஏரிகளாகின்றன. பனிப்பாறை ஏரிகள் இயற்கை அணைகள் என்றும் கூறப்படுகின்றன.
இமயமலையில், உற்பத்தியாகும் கங்கை, பிரம்ம புத்திரா மற்றும் சிந்து போன்ற முக்கிய நதிகளும் அதன் கிளை ஆறுகளும்,தெற்காசியாவில் 600 மில்லியன் மக்களுக்கு நீர் மற்றும் உணவு ஆதாரமாக விளங்குகின்றன. உலகின் மூன்றில் இரண்டு பங்கு நீர்ப்பாசன விவசாயம் உருகும் பனி மற்றும் பனிப்பாறைகளின் நீர் ஆதாரங்களையே நம்பியுள்ளன.
புவி வெப்பமடைவதால், மில்லியன் கணக்கான பனிப் பாறைகள் உருகுகின்றன. இதனால், பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன. பனிப்பாறை ஏரிகளின் தண்ணீர் அளவு அதிகமாகும் போது, வெள்ளம் ஏற்படுகிறது. இது, உலகத்துக்கே பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
1975 முதல் சுமார் 9,000 ஜிகா டன் பனிப் பாறைகள் முற்றிலுமாக அழிந்துள்ளன என்று இந்த ஆண்டுக்கான ஐநா சபையின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. இமயமலையில் கிட்டத்தட்ட 7,500 பனிப்பாறை ஏரிகளில், ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய 189 ஏரிகளின் பட்டியலைத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளது.
சீனாவிலும், (Tibet ) திபெத், (Xinjiang) ஜின்ஜியாங், (Sichuan) சிச்சுவான் மற்றும் (Yunnan) யுன்னான் ஆகிய இடங்களிலும் அமைந்துள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் சுருங்கியுள்ளன. சீனாவின் மொத்த பனிப்பாறை பரப்பளவு 26 சதவீதம் சுருங்கிவிட்டதாகவும், சுமார் 7,000 சிறிய பனிப்பாறைகள் முற்றிலுமாக மறைந்துவிட்டன என்றும் கூறப் படுகிறது.
2011 முதல் 2024 வரை இமயமலைப் பகுதியில் பனிப்பாறை ஏரிகளின் பரப்பளவு 10.8 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமார் 67 ஏரிகளின் பரப்பளவு 40 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அடையாளம் காணப்பட்ட 2431 பனிப் பாறை ஏரிகளில், 1984 முதல் 676 பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்துள்ளன. இவற்றில், 601 ஏரிகள் இரு மடங்குக்கும் மேல் விரிவடைந்துள்ளன.10 ஏரிகள் 2 மடங்கும், 65 ஏரிகள் ஒன்றரை மடங்கும் விரிவடைந்துள்ளன.
இப்படி விரிவடையும் பனிப்பாறை ஏரிகள் உடையும் போது, பெரும் வெள்ளத்தையும், நிலச்சரிவையும் ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, 2013 ஆம் ஆண்டு கேதார்நாத் வெள்ளத்தையும், 2021 ஆம் ஆண்டு உத்தரகாண்ட வெள்ளத்தையும்,கடந்த ஆண்டு சிக்கிம் வெள்ளத்தையும் குறிப்பிடலாம்.
பனிப்பாறை ஏரி உடைவதால் ஏற்படும் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு, தேசிய பனிப்பாறை வெளியேற்ற வெள்ள அபாயத் தணிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. மேலும்,தேசிய பசுமை இந்தியா திட்டம் (GIM) மற்றும் தேசிய காலநிலை மாற்றம் செயல் திட்டத்தையும் (NAPCC) மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இமயமலையில்,பனிப்பாறைகள் உருகுவதால்,வெள்ளம் ஏற்படுவதோடு,நீண்ட காலத்துக்கான நீர் ஆதாரங்கள் வற்றும் அபாயம் ஏற்படும். இமயமலையின் பனிப்பாறை ஏரிகளில் 50 சதவீதம் உடையும் நிலையில் உள்ளன என்று ( NITHI AAYOG ) நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பனிப்பாறைகள் உடைந்தால், வேளாண்மை பாதிக்கப் படுவதோடு, குடியிருப்புகள் அழிந்து போகும் அபாயமும் உள்ளது.
பனிப்பாறைகள் உருகுவது என்பது உள்ளூர் பிரச்சனை அல்ல. உலகளாவிய பிரச்சனை ஆகும். ஆசியாவின் நீர் கோபுரமாக இமயமலையைப் பாதுகாக்கத் தவறினால், பல கோடி மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குரியதாகும்.