செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இறக்குமதி வரி ரத்து எதிரொலி : விலை குறையும் ஸ்மார்ட் போன்கள்!

08:59 AM Mar 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

புதிய நிதி மசோதாவில் கொண்டு வரப்பட்ட 35 திருத்தங்களின் ஒரு பகுதியாக, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு வசூலிக்கும் 6 சதவீத சமநிலை வரியை ரத்து செய்ய மத்திய அரசு  முடிவெடுத்திருக்கிறது.  அமெரிக்காவின் பரஸ்பர வரி ஏப்ரல் 2 முதல் அமலுக்கு வரவிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமா ? இதனால், அமெரிக்காவுடனான இந்தியாவின்  வர்த்தக உறவு மேம்படுமா ?  அதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற ட்ரம்ப், வரி விதிப்பு கொள்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தார். சீனா,கனடா மற்றும் மெக்சிகோவுக்கு அதிக வரியும்,  பிற நாடுகளுக்குப் பரஸ்பர வரியும் விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டார்.

இந்தியாவை நேரடியாகப் பாதிக்கும் ட்ரம்ப்பின் Reciprocal tariffs என்ற பரஸ்பர வரி கட்டணங்கள் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

Advertisement

அமெரிக்காவுக்கான இந்திய மொத்த ஏற்றுமதியில் 87சதவீதத்தைப் பாதிக்கும் இந்த பரஸ்பர வரியால் இந்திய ஏற்றுமதி துறையில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆண்டுதோறும் இழப்பு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்துள்ளது.

மேலும், இந்திய ஏற்றுமதியில், ஆட்டோமொபைல் 15 சதவீதமும், மருந்து 30 சதவீதமும் சரிவடைய வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது.  முன்னதாக, இரு நாடுகளும் 2030ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 200 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க முடிவு செய்திருந்தன. கூடுதலாக, இருநாடுகளும் வர்த்தக போரைத் தவிர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

கடந்த  மார்ச் முதல் வாரத்தில், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம் குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெற்றது. இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தை, டெல்லியில் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக, ஏற்றுமதியில் 66 பில்லியன் டாலர்களை பாதுகாக்கும் வகையில் முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதாவது, 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதிக்கான வரியைப் பாதிக்குப் பாதியாகக் குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கப் பொருட்களில் மீதான இறக்குமதி வரிகளை 55 சதவீதமாக இந்தியா குறைத்துள்ளது.  இதற்கிடையே, ஆன்லைன் விளம்பரங்களுக்கான சமன்படுத்தல் வரியை ரத்து செய்யும் திருத்தத்தை நிதி மசோதாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

சமன்படுத்தல் வரி என்பது ஒரு உள்நாட்டு டிஜிட்டல் நிறுவனம்,  ஒரு வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனத்தின் வரிகளை  'சமன்படுத்த' விதிக்கப்படும் அரசு வரியாகும். இது 2016 ஆம் ஆண்டு முதல், நடைமுறையில் உள்ளது.  ஆன்லைன் விளம்பரங்களுக்காக ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஆண்டுக்கு  1 லட்சம் ரூபாய்க்கு மேல் மத்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டும்.

"கூகுள் வரி" என்று அழைக்கப்படும் இந்த வரி, பெரும்பாலும், கூகுள், மெட்டா மற்றும் அமேசான் போன்ற வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களால் வழங்கப்படும் ஆன்லைன் விளம்பர சேவைகளைப் பாதிக்கிறது.

எனவே, அமெரிக்கா தொடுத்துள்ள வர்த்தக போரைத் தடுக்கும் முயற்சியில் கூகுள் வரி நீக்கப் படுவதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தச் சூழலில், மின்சார வாகன  பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படும் 35 பொருட்களுக்கும், மொபைல் போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 28 பொருட்களுக்கும் இறக்குமதி வரிகள் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக மின்சார வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களின்  விலை குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Advertisement
Tags :
MAINIndiaamericausaImport duty cancellation echoes: Prices of smartphones will drop!FEATURED
Advertisement