இலங்கை பிரதமராக ஹரிணி : அரசியல் வாழ்வை வடிவமைத்த இந்திய கல்லூரி - சிறப்பு கட்டுரை!
டெல்லி இந்து கல்லூரியில் படித்து தற்போது இலங்கையின் பிரதமராக உயர்ந்துள்ள ஹரிணி அமர சூரிய கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்...
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் , தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் 56 வயதான அநுர திஸாநாயக்க வெற்றி பெற்று, இலங்கையின் 9 வது அதிபராக பதவி ஏற்றார்.
அநுர திஸாநாயக்க வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த 54 வயதான ஹரிணி அமர சூரிய, இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
அவருக்கு, கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.
1970 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த ஹரிணி அமர சூரிய, கொழும்பு பிஷப் கல்லூரியில் படிப்பை முடித்தார். பிறகு, இந்தியாவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலை பட்டம் பெற்றார்.அதன்பின் ஆஸ்திரேலியாவில் முதுகலை பட்டம் பெற்றபின், எடின்பர்க் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றார்.
பல நாடுகளில் பல கல்லூரிகளில் படித்திருந்தாலும், டெல்லி இந்து கல்லூரியில் ஹரிணி அமர சூரிய படித்த காலம் அவரது எதிர்கால அரசியல் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
அரசியல், கலை மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல வெற்றியாளர்களை உருவாக்கிய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட டெல்லி இந்து கல்லூரியின் முதல்வர் அஞ்சு ஸ்ரீவஸ்தவா, ஹரிணி பிரதமரானதற்கு பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும், 1991ஆம் ஆண்டிலிருந்து 1994ம் ஆண்டு வரை சமூகவியல் மாணவியாக இருந்ததாகவும், ஹரிணியின் வெற்றிக்கு இந்து கல்லூரி முக்கிய பங்காற்றி இருப்பதாகவும் அஞ்சு ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
அதே போல், இலங்கை பிரதமருடன், இந்து கல்லூரியில் ஒன்றாக படித்த இந்தி திரைப்பட இயக்குனர் நளின் ராஜன் சிங், கல்லூரி விழாக்கள் மற்றும் விவாதங்களில் அதிக ஈடுபாடு கொண்ட ஹரிணி பிரதமராகி இருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக கூறியுள்ளார்.
கல்விப் பின்னணி மற்றும் இந்தியாவுடனான ஹரிணி அமரசூரியவின் தொடர்புகளைக் கருத்தில் கொண்டே அவர் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில், குறிப்பாக கல்வி, தொழில்நுட்பம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
70 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர திஸாநாயக்க, நிதி, பொருளாதாரம் மற்றும் சுற்றுலா உட்பட பல முக்கிய துறைகளை தன் வசமே வைத்திருக்கிறார்.
வரிகளை குறைக்கும் முடிவு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெறும் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வது ஆகியவை இலங்கை முதலீட்டாளர்களிடையே கவலையை எழுப்பியுள்ளது.
மேலும், ஏற்கெனவே இலங்கையின் 25 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை மறுசீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டால், இலங்கையின் பொருளாதார நிலைமை இன்னும் மோசமாகும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்..
இந்நிலையில் தான், 2020ம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தியில் இணைந்த ஹரிணி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இலங்கையின் பிரதமர் ஆக்கப்பட்டிருக்கிறார்.