இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்தம் - இந்தியா வரவேற்பு!
இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை இந்தியா வரவேற்றுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதனைத்தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
இந்நிலையில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே 42 நாட்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பணய கைதிகள் விடுதலைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் ஜனவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி அறிவித்துள்ளனர். காசாவை பேரழிவிற்கு உட்படுத்திய 460 நாட்களுக்கு பிறகு போர் நிறுத்தம் வந்துள்ளது.
இதனை இந்தியா வரவேற்றுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது;
இது காசா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான உதவிக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து பிணை கைதிகளையும் விடுவிக்கவும், போர்நிறுத்தம் வேண்டுமென்றும், நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.