இஸ்ரோ தலைவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? சிறப்பு தொகுப்பு!
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரின் மாத சம்பளம் எவ்வளவு என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
இஸ்ரோ அறிவியல், விண்வெளி ஆய்வு, பொறியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது. இஸ்ரோவின் ககன்யான் திட்டம் சர்வதேச அளவில் முன்னிலையில் உள்ளது.
சர்வதேச விண்வெளித்துறையில் தனி முத்திரையை பதித்துள்ள இஸ்ரோ-வின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 14-ம் தேதி பதவியேற்கவுள்ளார் என இஸ்ரோ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்கு வி.நாராயணன் இந்த பதவியில் நீடிப்பார் என மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்த வி.நாராயணன், கடந்த 40 ஆண்டுகளாக அங்கு சேவையாற்றி வருகிறார். இஸ்ரோவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள அவர், ராக்கெட் மற்றும் விண்கல புரோபல்ஷன் பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்தவர். 2017-ம் ஆண்டு முதல் 2037-ம் ஆண்டு வரை இஸ்ரோ-வின் புரோபல்ஷன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அவர்தான் இறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரோ தலைவராக நியமிக்கபட்டுள்ள வி.நாராயணனின் மாத சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு RPG Enterprises நிறுவன தலைவரான ஹர்ஷ் வர்தன் கொயெங்கா, முன்னாள் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் மாத சம்பளம் இரண்டரை லட்சம் ரூபாய் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதை மையமாக வைத்தே இந்த விவாதங்கள் தற்போது நடந்து வருகிறது.
அதனடிப்படையில் வி.நாராயணம் பெறும் மாத சம்பளம் அந்த தொகையை ஒத்திருக்கும் என கருதப்பட்டாலும், தலைவர் பதவிக்கான சம்பள அமைப்பு பற்றி இதுவரை இஸ்ரோ தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
எனினும், ஊதியம் தவிர படிகள், சிறப்பு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இஸ்ரோ தலைவருக்கு வழங்கப்படும் என தெரிகிறது. பிற தனியார் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துடன் ஒப்பிடும்போது இஸ்ரோவில் குறைவாக இருந்தாலும் தேசத்திற்காக ஆற்றும் பணியே பிரதானம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.