இஸ்லாமாபாத் முற்றுகை : இம்ரான் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ராணுவம் - சிறப்பு கட்டுரை!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட முற்றுகை தடுக்கப் பட்டுள்ளது. போராட்டக் காரர்கள் தலைநகருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில்,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. அதையும் மீறி வலுப்பெற்ற போராட்டத்தில் இருந்து இம்ரானின் ஆதரவாளர்கள் பின் வாங்கியுள்ளனர். என்ன தான் நடக்கிறது பாகிஸ்தானில் ? இந்த போராட்டத்தின் பின்னணி என்ன? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
பிரபல கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கான் 2018ம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால், பாகிஸ்தான் இராணுவத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 2022 ஆம் ஆண்டு நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப் பட்டு,பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறியப் பட்டார் இம்ரான் கான்.
பிரதமர் பதவியில் இருந்து இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து, இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளுக்கு அவரது கட்சியும் கட்சியினரும் ஆளாகியுள்ளனர்.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமரும், பிரபல கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது ஊழல் உட்பட ஏகப் பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் பரிசுகள் அனைத்தும் அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும் .
பிரதமராக இருந்த காலத்தில் விலை உயர்ந்த ஆபரண பரிசு இம்ரான் கானுக்கு வழங்கப் பட்டது. அரசு கருவூலத்தில் சேர்க்காமல், முறைகேடான வழியில் அந்த பரிசை எடுத்துக் கொண்டதாக இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் இம்ரான் கான் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கிடைத்த உடனேயே, மற்றொரு வழக்கில் இம்ரான் கானை ராவல்பிண்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல் துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, காவல் துறை வாகனங்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இம்ரான் கான் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தான் இம்ரான் கான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாகூர், ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இம்ரான் கான் மீது மொத்தம் 62 வழக்குகள் உள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான் மீது 54 வழக்குகள் உள்ளன.
அனைத்து வழக்குகளிலும் இருந்தும் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று இம்ரான் கானின் சகோதரி நூரின் நியாசி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால்,லாகூர் நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே இம்ரான் கான் இப்போதைக்கு விடுதலை ஆவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
இம்ரான் கான் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்து வருகிறது . இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை, இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி, பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியினர் பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணியாக சென்றனர்.
அவர்களின் நோக்கம் மத்திய இஸ்லாமாபாத்தில் உள்ள DEMOCRACY CHOWK எனப்படும் டி-சௌக்கை அடைவதாகும் . பாகிஸ்தானின் பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம் மற்றும் உச்ச மன்றம் உட்பட பல முக்கிய அரசு துறைகள் உள்ள நகர சதுக்கமே டி-சௌக் ஆகும். இது, ஜின்னா அவென்யூ மற்றும் அரசியலமைப்பு அவென்யூ சந்திப்பு சேரும் இடமாகும்.
தடையை மீறி போராட்டம் நடத்தும் இம்ரான் ஆதரவாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் தலைநகருக்குள் நுழைந்தனர். போராட்டக் காரர்களுக்கும் ராணுவப் படையினருக்கும் நடந்த மோதல் வன்முறையாக மாறியது. இந்த மோதலில், போலீசார் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலநூறு பேர் காயமடைந்தனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய இம்ரான்கானின் மனைவி புஷ்ரா பீபி மற்றும் அலி அமீன் கந்தாபூர் ஆகியோர் இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை. ஹரிபூர் வழியாக கைபர் பக்துன்க்வாவுக்கு அவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
மூன்று நாட்கள் போராட்டங்களுக்குப் பிறகு இம்ரான் கட்சியின் தலைவர்கள் பின்வாங்கிய நிலையில், உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம், இம்ரானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் இராணுவத் தளபதிகளின் வீடுகளை முற்றுகையிட்டதோடு, பாகிஸ்தான் இராணுவத் தலைமையகத்தையும் தாக்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.