ஈரான் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - மேற்கு ஆசியாவில் போர் பதற்றம்!
ஈரான் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Advertisement
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஒரு வருடமாக போர் நீடித்து வரும் நிலையில்,ஹாமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, கிளர்ச்சி குழுக்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான், ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரு முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனால் அவை இஸ்ரேலால் முறியடிக்கப்பட்டன. ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் மேற்கு ஆசியாவில் உச்ச கட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.இஸ்ரேலின் அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக மத்திய தெஹ்ரானில் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன.
தெஹ்ரான் மாகாணத்தைச் சுற்றியுள்ள வான்வெளியில் "பாதிப்பான இலக்குகளை" ஈரான் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக அரசு செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.