For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஈரான் ராணுவ நிலைகளை பஸ்பமாக்கிய இஸ்ரேல் - சிறப்பு கட்டுரை!

08:00 AM Oct 28, 2024 IST | Murugesan M
ஈரான் ராணுவ நிலைகளை பஸ்பமாக்கிய இஸ்ரேல்   சிறப்பு கட்டுரை

ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மீது மிகத் துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ளது. வான்வழி தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஈரானில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத ஆட்சியும், மத்திய கிழக்கில் உள்ள ஈரானின் ஆதரவு ஆயுதக் குழுக்களும், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர். இஸ்ரேல் மக்களைப் பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

Advertisement

ஈரான் நாட்டிலிருந்தும் இஸ்ரேல் மீது நேரடி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பதிலுக்கு, காஸாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக, இஸ்ரேலுக்கு எதிராக இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினர் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தி, அதன் அனைத்து தலைவர்களையும் அழித்த இஸ்ரேல், ஈரான் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

Advertisement

அமெரிக்க உளவுத்துறையின் செயற்கைக்கோள் உதவியுடனும், ஈரானில் உள்ள இஸ்ரேலின் வெளிநாட்டு உளவு அமைப்பான மொசாத்தின் உதவியுடனும்,ஈரானின் இலக்குகளை இஸ்ரேல் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது இஸ்ரேல் ஈரானை தாக்கி இருக்கிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைமையகம் மற்றும் படைமுகாம்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிட்கானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் விமானப் பிரிவின் அமீர் அல்-முமின் ஏவுகணைத் தளம், பிட்கான் அருகே உள்ள பாலிஸ்டிக் ஏவுகணை ஆராய்ச்சி மையம், தென்மேற்கு தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் விமானப் பிரிவின் தளவாட மையம் மற்றும் ஈரானின் வான்பாதுகாப்பு மையத்தையும், இஸ்ரேல் இராணுவம் துல்லியமாக தாக்கி அழித்திருக்கிறது.

ஈரானின் 20 இராணுவ தளங்களைக் குறிவைத்த நடத்திய இந்த தாக்குதலில், இஸ்ரேல் சுமார் 100 போர் விமானங்களைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஈரான் தலைநகரில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாகத் தெரிவித்த அந்நாட்டு ஊடகங்கள், நகரத்தைச் சுற்றியுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்தும் ஒலிகள் எழுப்பப் பட்டதாகவும் கூறியுள்ளன. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஈரான் அரசு தங்களது விமான சேவையை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. மேலும் தங்கள் வான்வெளியை மூடி விட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடியைக் கொடுத்து விட்டதாகவும், இஸ்ரேல் அரசுக்கு இருந்த ஈரானின் அச்சுறுத்தல்களை முறியடித்து விட்டதாகவும் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானின் இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியதற்கு, ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமானால், இஸ்ரேல் நாட்டையும், இஸ்ரேல் மக்களையும் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

கூடுதலாக, உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது என்று கூறியுள்ள இஸ்ரேல், நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வதாக கூறியுள்ளது.

இதற்கிடையில், ஈரானில் அணு உலைகள், எண்ணெய் கிடங்குகளிலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு, இஸ்ரேலை அமெரிக்க கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement
Tags :
Advertisement