ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பு மனு குளறுபடி!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுவில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக வேட்பாளர்களின் எண்ணிக்கை 47-ல் இருந்து 46ஆக குறைந்துள்ளனது.
Advertisement
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 65 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
8 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடுவதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தியன் பொலிடிக்கல் காங்கிரஸ் பார்ட்டியை சேர்ந்த பத்மாவதி என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகவும், அவரது வேட்பு மனு பரிசீலனையில் ஏற்று கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் முறையிட்டார்.
இதனை தொடர்ந்து பத்மாவதியின் வேட்புமனு நிராகரிப்பு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 47-ல் இருந்து 46ஆக குறைந்துள்ளது.