ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேர்தல் அதிகாரி மனீஷ் மாற்றம்!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றிய மனீஷ் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் போட்டியிட 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 3 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பட்டதாலும், 8 பேர் வாபஸ் பெற்றதாலும் 46 பேர் களத்தில் உள்ளனர்.
முன்னதாக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் நடவடிக்கையின்போது கர்நாடகாவைச் சேர்ந்த பத்மாவதி என்ற பெண் தாக்கல் செய்த வேட்புமனுவை ஏற்கக் கூடாது என சக வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் போட்டியிட முடியாது என்ற நிலையிலும் பத்மாவதியின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரியாக இருந்த மனீஷ் ஏற்றது விவாதத்துக்கு வழிவகுத்தது.
பிற வேட்பாளர்கள் சுட்டிக்காட்டிய பின்னரே பத்மாவதியின் வேட்புமனுவை மனீஷ் நிராகரித்தார்.
இதனால் எழுந்த சர்ச்சை காரணமாக மனீஷ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஒசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ஶ்ரீகாந்த், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீகாந்த் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.