உக்ரைனுக்கு ஆயுதங்கள், ரஷ்யாவை மிரட்டும் தென்கொரியா - சிறப்பு கட்டுரை!
ரஷ்யாவுக்காக உக்ரைனில் போர்புரிய வட கொரியா தன் வீரர்களை அனுப்பியதற்குப் பதிலடியாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று தென்கொரியா எச்சரித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
வடகொரியாவும் ரஷ்யாவும் கடந்த இரண்டு வருடங்களாக தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகின்றன.
கடந்த ஜூன் மாதம், இரு நாடுகளும் தாக்கப்பட்டால் உடனடி ராணுவ உதவியை வழங்குவதற்கான அனைத்து வழிகளையும் இருநாடுகளும் பயன்படுத்த வேண்டும் என்ற பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
இதனை தொடர்ந்து, உக்ரைன் போரில் உதவுவதற்காக வடகொரியா 1,500 சிறப்பு அதிரடிப் படை வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாக தென் கொரிய உளவு அமைப்பு தகவல் வெளியிட்டிருந்தது. அதே வேளையில், கூடுதலாக, 10,000 வடகொரியா வீரர்கள் ரஷ்ய படையுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட ஆயத்தமாகி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி இருந்தார்.
உக்ரைன் போரில் உதவுவதற்குப் பிரதிபலனாக வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை ரஷ்யா வழங்கும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என வடகொரியா மிரட்டி வரும் நிலையில், ரஷ்யாவின் அதிநவீன அணு ஆயுதங்கள் கிடைத்தால் நிலைமை விபரீதமாகும் என தென் கொரியா கருதுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, தென் கொரியாவுக்கான ரஷ்ய தூதர் ஜார்ஜி ஜினோவியேவ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, தென் கொரியா வெளியுறவு துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி,தென் கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் ஹாங் கியூனை சந்தித்த ரஷ்ய தூதர், இது எந்த விதத்திலும் தென் கொரியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரானது அல்ல என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலும், வடகொரியா படைகளை அனுப்புவதையும், ஆயுதங்கள் மாற்றப்படுவதையும் ஒரே குரலில் வடகொரியாவும் ரஷ்யாவும் மறுத்துள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள வடகொரியா படைகள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என தென்கொரியா வலியுறுத்தியுள்ளது. மேலும், வடகொரியாவுக்கு உயர் தொழில்நுட்ப அணு ஆயுதங்கள் , ஏவுகணைகள் ஆகியவற்றை ரஷ்யா வழங்கும் பட்சத்தில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என்றும் தென் கொரியா, ரஷ்யாவை கடுமையாக எச்சரித்துள்ளது.