உக்ரைன் மீது தாக்குதல் - ரஷ்யாவுடன் இணைந்து போரிடும் வடகொரியா - சிறப்பு கட்டுரை!
உக்ரைனின் ஆக்ரமிப்பில் உள்ள குர்ஸ்க் பகுதி கைப்பற்ற 50,000 ரஷ்ய மற்றும் வடகொரிய வீரர்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
Advertisement
வட கொரியாவுக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் பயணம் மேற்கொண்ட ரஷ்ய அதிபர் புதின், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.
ரஷ்யாவும் வட கொரியாவும் தங்களுக்கு எதிராக ராணுவத் தாக்குதல் நடந்தால் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர உதவி செய்வதை இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக வடகொரியாவும், ரஷ்யாவும் ஒன்றாக களமிறங்க தயாராகி விட்டதையே இந்த ஒப்பந்தம் எடுத்து காட்டுகிறது.
ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபை, இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது. தொடர்ந்து கடந்த வாரம் , ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவையும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் வழங்கியுள்ள ஆணையில், ரஷ்ய பிரதமர் புதின் கடந்த ஞாயிற்றுக் கிழமை கையெழுத்திட்டுள்ளார்.
2022ம் ஆண்டு, உக்ரைன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான ராணுவப் படையெடுப்பைத் தொடங்கியது. வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்கள் நடத்திய இடங்களில் வட கொரியாவின் ஆயுதங்களின் தடயங்களை கண்டுபிடித்ததாக உக்ரைன் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் மாகாணமான குர்ஸ்க்கை கைப்பற்றிய உக்ரைன் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேலும், பக்கத்து மாகாணமான Belgorod பெல்கோரோட் வரை தாக்குதலைத் தொடங்கியது.
குர்ஸ்க் பகுதியை மீட்டெடுக்க, ரஷ்யா தீவிரமாக போராடி வருகிறது. ரஷ்யாவின் தெற்கு குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் படைகளை எதிர்க்க, வட கொரியா 11,000 துருப்புக்களை ரஷ்யாவுக்கு அனுப்பியது.
வடகொரிய வீரர்களை எதிர்கொள்ள உக்ரைன் வீரர்கள் அச்சப்படுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உக்ரைன் இராணுவ அதிகாரி தெரிவித்திருந்த நிலையில், வடகொரியாவின் elite வீரர்கள் என கொண்டாடப்படும் இந்த சிறப்புப் படையினரில் 40 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ரஷ்யாவில் வடகொரிய ராணுவம் களமிறக்கப்பட்ட உடனேயே, வடகொரிய ராணுவத்தின் திறமை குறித்து ராணுவ வல்லுனர்கள் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், குர்ஸ்கில் உக்ரைனை தாக்க சுமார் 50,000 ரஷ்ய மற்றும் வடகொரிய வீரர்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வீரர்கள் இல்லாமல் ஒரு புதிய படை திரட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க கூறியுள்ளது.
பீரங்கித் தாக்குதல், அடிப்படை காலாட்படை யுக்திகள் மற்றும் அகழிகளை அகற்றுதல் ஆகியவற்றில் வட கொரிய வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்,வட கொரிய வீரர்களுக்கு இயந்திர துப்பாக்கிகள், துப்பாக்கி சுடும் துப்பாக்கிகள், தொட்டி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகளை ரஷ்யா வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு, உக்ரைனின் முக்கியமான நகரங்களான வுஹ்லேடர் மற்றும் உக்ரைன்ஸ்க் ஆகியவற்றை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. உக்ரைன் போரில் தொடர் வெற்றிகளை பெற்றுவரும் ரஷ்யா, உக்ரைனின் இன்னொரு முக்கியமான நகரமான Pokrovsk போக்ரோவ்ஸ்கை கைப்பற்றுவதற்கு முன்னேறுகிறது. போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களை இரு நாடுகளும் நடத்தியுள்ளன.
மாஸ்கோவை நோக்கி வந்த சில ட்ரோன்கள் உட்பட ஆறு மாகாணங்களில் 84 உக்ரைன் ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மாஸ்கோவின் தென்மேற்கில் உள்ள ரமென்ஸ்கோய் மாவட்டத்தில், ட்ரோன் பாகங்கள் விழுந்ததால் ஐந்து பேர் காயமடைந்தனர் மற்றும் நான்கு வீடுகள் தீப்பிடித்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதே நேரம், உக்ரைனின் ஒவ்வொரு பகுதியையும் குறிவைத்து,145 ட்ரோன்களை ரஷ்யா ஏவியுள்ளது. அவற்றில் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
அண்மையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொலைபேசி வாயிலாக நடைபெற்ற இந்த உரையாடலின் போது, உக்ரைன் உடனான போரை தீவிரப்படுத்த வேண்டாம் என்றும், போரை கைவிட வேண்டும் என்றும் ரஷ்ய அதிபரை, ட்ரம்ப் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.