உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பல்கலை. நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படும் அபாயம்: பேராசிரியர் பாலகுருசாமி
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மசோதா தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவால் கல்வி நிறுவனங்களில் அரசியல் தலையீடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பத்து சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், இசைவு தெரிவிக்க வகைசெய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உயர்கல்வியின் தரத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தீர்ப்பின் மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநருக்குத் துணைவேந்தர் நியமனத்தில் எந்த உரிமையும் இல்லை என்ற விநோதமான நிலை உருவாகியிருப்பதாகக் கூறிய பேராசிரியர் பாலகுருசாமி, இந்த மாற்றம் உயர்கல்வியில் சுனாமியைப் போல் தாக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் பேராசிரியர் பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.