உணவில் கலக்கப்பட்ட ஈயம், பாதரசம்! : டென்னில் வீரர் ஜோகோவிச் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
ஆஸ்திரேலியாவில் தான் உண்ட உணவில் அதிகளவு ஈயம் மற்றும் பாதரசம் கலக்கப்பட்டிருந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!
உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களுள் ஒருவரான நோவாக் ஜோகோவிச் தொடர்ச்சியாக 428 வாரங்கள், நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக்கொண்ட பெருமைக்கு சொந்தக்காரர். செர்பிய நாட்டு வீரரான இவர் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை தன் வசம் வைத்துள்ளவர்.
ஆஸ்திரேலியாவில் வரும் 12-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க அங்கு சென்றுள்ள ஜோகோவிச், அண்மையில் பகிர்ந்த ஒரு தகவல் விளையாட்டு உலகில் புயலை கிளப்பியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இதே ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க அந்நாட்டுக்குச் சென்ற ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத காரணத்தால் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவரது நாட்டிற்கே திருப்பியனுப்பப்பட்டார். தலைசிறந்த வீரர்களுள் ஒருவரான ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது அப்போது பெரும் சர்ச்சையானது.
இந்த சம்பவத்தால் அதிருப்தியின் உச்சத்திற்கு சென்ற செர்பிய வீரர், அதற்கு அடுத்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் வென்று தனது மன வேதனைக்கு மருந்து போட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு, இத்தாலி வீரரான ஜானிக் சின்னரிடம் தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினாலும், இந்த ஆண்டு நடைபெறும் தொடரில் வென்று சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ஜோகோவிச் களமிறங்கவுள்ளார்.
இதற்கிடையே கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தான் தங்கிருந்தபோது உண்ட உணவில் அதிகளவு ஈயம் மற்றும் பாதரசம் கலக்கப்பட்டிருந்ததால், கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாக ஜோகோவிச் பகிர்ந்துள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தான் வெளியேற்றப்படுவதற்கு முன் ஒரு ஹோட்டல் அறையில் தங்கவைக்கப்பட்டதாகவும், அப்போது அருந்திய உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சொந்த நாட்டிற்கு திரும்பிய பின் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது, தனது உடலில் அதிகளவு ஈயம் மற்றும் பாதரசம் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால சம்பவங்கள் ஆஸ்திரேலியா செல்லும்போதெல்லாம் தனக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துவதாகவும் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
முன்னணி வீரர் ஜோகோவிச் பகிர்ந்துள்ள இந்த தகவல்கள் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நடப்பு தொடரின் முதல் ஆட்டத்தில் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வீரரான நிசேஷ் பசவரெட்டியுடன் மோதவுள்ளார்.
அதில் வெற்றிபெறும் பட்சத்தில் அவர் காலிறுதியில் 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸுடனும், அதிர்ஷ்டம் ஒத்துழைக்கும் பட்சத்தில் அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுடனும் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சக போட்டியாளராக இருந்த முன்னாள் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேவை பயிற்சியாளராக கொண்டுள்ள ஜோகோவிச், இந்த தொடரை வென்று தனது 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்..