உணவு டெலிவரி செய்பவர்களுக்கு விதிமுறைகள் : 4 வாரங்களில் பதிலளிக்கும்படி டிஜிபி - உணவு நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
உணவு டெலிவரி செய்பவர்களுக்கு விதிமுறைகள் வகுக்க வேண்டி தாக்கல் செய்த மனுவுக்கு, டிஜிபி மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழகம் முழுவதும் ஸ்விகி மற்றும் சுமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஆட்கள் போல் நடித்து, பலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
டெலிவரி செய்யும் நபர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை ஏதும் அவர்களிடம் இல்லை எனவும், பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்து வருவதால் அடையாளம் காண முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், கண்காணிக்கவும், முறைப்படுத்தவும், விதிகளை வகுக்கும்படி டிஜிபிக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக டிஜிபி, ஸ்விகி, சுமோட்டோ, டன்ஸோ மற்றும் செப்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.