உண்மையான ஹீரோ - PHANTOM, ராணுவ செல்லப்பிராணியின் உயிர் தியாகம் - சிறப்பு கட்டுரை!
ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கு, இந்திய ராணுவ நாய் Phantom வீரமரணம் அடைந்துள்ளது. தேசத்திற்கு சேவை செய்யும் போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த Phantom பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியான ஒயிட் நைட் கார்ப்ஸின் முக்கிய உறுப்பினராக பல வீரநாய்கள், தேசப் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றன.
அதில், K9 பாரா சிறப்புப் படையில் Phantom என பெயரிடப்பட்ட வீர நாய், முக்கியமான இராணுவ நாயாக இருந்தது. நான்கு வயதுடைய இந்த இராணுவ நாய் பெல்ஜிய மாலினோயிஸ் இனத்தைச் சேர்ந்ததாகும். அச்சமின்றி சண்டையிடுவதிலும், தீவிரவாதிகளின் மறைவிடங்களைத் துல்லியமாக கண்டுபிடிப்பதிலும் அதீத திறமை கொண்டதாக Phantom விளங்கியது.
2020ம் ஆண்டு மே 25ம் தேதி Phantom நாய் பிறந்தது. மீரட்டில் உள்ள ரீமவுண்ட் கால்நடை மருத்துவப் படையில் பயிற்சி பெற்றது.பின்னர், Phantom, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி தீவிரவாத எதிர்ப்புப் படையில் இணைந்தது. தைரியம், விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை Phantom வீர நாயின் சிறப்புக்களாகும்.
கடந்த சில மாதங்களாகவே, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சுந்தர்பானி செக்டரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அக்னூர் பகுதியின் அசன் கோவில் அருகே, தீவிரவாதிகள், ராணுவ ஆம்புலன்ஸ் வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதனை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க உடனடியாக தீவிரதேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தேசப் பணியில் இருந்த வீரமிக்க ராணுவ நாய் Phantom தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தது.
வீரமரணம் அடைந்த Phantom நாய்க்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்திய ராணுவம், அதன் முன்மாதிரியான துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளது.
வீரம் மிக்க இந்திய இராணுவ நாய் Phantom ஒரு உண்மையான ஹீரோ என்றும், அதன் உயர்ந்த தியாகத்தை வணங்குவதாகவும், தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, 2023ம் ஆண்டில், ஜம்மு காஷ்மீரில், ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், 21வது ராணுவ படை பிரிவைச் சேர்ந்த கென்ட் என்ற ஆறு வயதான ராணுவ நாய் வீர மரணம் அடைந்தது. கென்ட் பெண் லாப்ரடோர் இனத்தைச் சேர்ந்ததாகும். தனது பயிற்சியாளரைத் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்ற நிலையில், தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு கென்ட் உயிரை விட்டது குறிப்பிடத் தக்கது.
அக்னூரில் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளும் கடந்த செவ்வாய்க்கிழமை காலை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.