உயர்கல்வியில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை?
உயர்கல்வியில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
இது தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழு, புதிய மாணவர் சேர்க்கை ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் ஒருமுறையும், ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 2வது முறையும் நடைபெறும் என அறிவித்துள்ளது.
இதனால் மாணவர்கள் அடுத்த கல்வியாண்டு வரை காத்திருக்காமல் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து இடையில் மாறிக்கொள்ள முடியும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
அதேபோல், மாணவர்கள் ஒரு படிப்பில் இருந்து வெளியேறி வேறு படிப்பில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு, முந்தைய படிப்பின் கல்வியாண்டில் இருந்தே புதிய படிப்பை மாணவர்கள் தொடரலாம் எனவும் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 வகுப்பில் எடுத்த பாடப்பிரிவுக்கு பதிலாக இளநிலையில் வேறு எந்த பாடப்பிரிவிலும் மாணவர்கள் சேரலாம் என தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு, இளநிலையில் எடுத்த பாடப்பிரிவுக்கு பதிலாக முதுகலையில் வேறு படிப்பிலும் சேரலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சலுகைகளை பெற தேசிய அளவில் அல்லது பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சிபெற வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக இளங்கலை பட்டப்படிப்பில் கால அளவை மாணவர்களே தேர்வு செய்யும் புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.