உயிரை பறித்த ஜெனரேட்டர் புகை - 12 இந்தியர்கள் பலியானது எப்படி? - சிறப்பு தொகுப்பு!
ஜார்ஜியா நாட்டில், குடாரியில் உள்ள இந்திய உணவகத்தின் இரண்டாவது மாடியில் 12 இந்தியர்கள் இறந்து கிடந்தனர். கார்பன் மோனாக்சைடு விஷம்தான் மரணத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. ஜார்ஜியா ஸ்கை ரிசார்ட்டில் என்ன நடந்தது ? இந்தியாவை சேர்ந்த 12 பேர் இறந்தது எப்படி? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஜார்ஜியா நாட்டில் (Gudauri )குடாரி ஸ்கை ரிசார்ட், கடல் மட்டத்திலிருந்து 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது, பிரபலமான குளிர்கால சுற்றுலா தலமான ஜார்ஜியாவில் உள்ள (Caucasus mountains) காகசஸ் மலைகளின் Mtskheta-Mtianeti பகுதியில் அமைந்துள்ளது. இது, 19 ஆம் நூற்றாண்டில், ஜார்ஜியா மற்றும் ரஷ்யாவை இணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஜார்ஜிய ராணுவ சாலையில் உள்ள ஒரு வர்த்தக மையமாகும்.
கடந்த வாரம், இந்த ஸ்கை ரிசார்ட்டில், "ஹவேலி" உணவகத்திற்கு மேலே உள்ள தூங்கும் பகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், கார்பன் மோனாக்சைடு தான் மரணத்திற்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில், ஜார்ஜியாவின் உள்துறை அமைச்சகமும், வன்முறை அல்லது காயங்கள் பற்றிய எந்த ஆதாரமும் மரணம் குறித்த முதல் கட்ட விசாரணையில் கிடைக்க வில்லை என்று தெரிவித்துள்ளது. பலியானவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், மரணத்துக்கான சரியான காரணத்தை அறிய தடயவியல் மருத்துவ பரிசோதனைக்கு உடல்கள் அனுப்பியுள்ளனர்.
சிலமாதங்களுக்கு முன், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஜார்ஜியாவுக்குச் சென்ற சென்ற பஞ்சாப்பை சேர்ந்த 26 வயதான சமீர் குமார், தனது பிறந்த நாளன்றே நச்சு காற்றினால் மரணமடைந்துள்ளார்.
அதே போல், சிறந்த வாழ்க்கையைத் தேடி கடந்த ஆண்டு ஜார்ஜியாவுக்குச் சென்ற 32 வயதான ரவீந்தர் சிங், மற்றும் அவரது மனைவி குர்விந்தர் கவுர் இருவரும், இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஜார்ஜியா செல்வதற்காக சுமார் 13 லட்சம் வரை செலவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் பஞ்சாபை சேர்ந்த 32 வயதான அம்ரீந்தர் கவுர், சிறு விவசாயியான தனது தந்தைக்கு உதவி செய்வதற்காக, ஜார்ஜியா சென்றுள்ளார். அவரது தந்தை, கிராமத்தில் இருந்த 4 ஏக்கர் நிலத்தை விற்று அவரை ஜார்ஜியாவுக்கு அனுப்பிவைத்தார். இப்போது அம்ரீந்தர் கவுரும் 30 வயதான அவரது மைத்துனர் மனிந்தர் கவுரும் ஹவேலியில் உள்ள உணவக விபத்தில் பலியாகியுள்ளனர்.
இந்திய தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு, இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு உடனடியாக கொண்டு வருவதற்கான முயற்சியில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தூங்கும் பகுதியில் படுக்கையறைகளுக்கு அருகில் ஒரு மூடிய பகுதியில் ஒரு மின் ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி, மின்தடை ஏற்பட்ட பிறகு மின் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதிலிருந்து தீங்கு விளைவிக்கும் புகை வெளிவந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த அடிப்படையில், ஜார்ஜியா நாட்டின் குற்றவியல் சட்டத்தின் படி, கவனக்குறைவான கொலை தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கார்பன் மோனாக்சைடு ஒரு நிறமற்ற, மணமற்ற வாயு ஆகும். பெரிய அளவில் உள்ளிழுக்கப்படும்போது பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
பொதுவாக, கார்பன் மோனாக்சைடு இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஆக்ஸிஜனை மாற்றுகிறது. இதனால் திசு சேதம் மற்றும் மரணம் ஏற்படுகிறது. கார்பன் மோனாக்சைடு காரணமாக, தலைவலி, தலைச்சுற்றல், உடல் பலவீனம், குமட்டல்ஆகிய அறிகுறிகள் ஏற்படும் என்று கூறப் படுகிறது.
கார்பன் மோனாக்சைடு யாருக்கும் மரணத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும். கைக்குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இரத்த சோகை, நாள்பட்ட இதய நோய் அல்லது சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாகும்.
எரிவாயு, மரம் கரி போன்ற பொருட்களை எரிப்பதால் கார்பன் மோனாக்சைடு அதிகமாக உருவாகும். குறிப்பாக , சிறிய பகுதிகளில், என்ஜின்கள் மற்றும் மின் உபகரணங்களை இயக்கும் போது, போதுமான காற்றோட்டம் இல்லாவிட்டால், கார்பன் மோனாக்சைடு உயிரைப் பறித்து விடும்.
கார்பன் மோனாக்சைடு நச்சுத்தன்மையால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 400 க்கும் மேற்பட்ட மக்கள் மரணம் அடைகிறார்கள். சுமார் 14,000 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.
கார்பன் மோனாக்சைடு நச்சுத் தன்மைக்கு, எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் டிடெக்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. எரிபொருளை எரிக்கும் சாதனங்களுக்கு சரியான காற்றோட்டத்தை உறுதி செய்வதும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
கரியை ஒருபோதும் வீட்டிற்குள் எரிக்கக்கூடாது என்றும் சிவப்பு, சாம்பல், கருப்பு அல்லது வெள்ளை கரி எரிக்கப்படும் போது கார்பன் மோனாக்சைடுஅதிகம் வெளியாகிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், தேசிய சோதனை முகமையின் முத்திரை உள்ள எரிவாயு உபகரணங்களை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.