உலகத்தரத்தில் பயன்பாட்டிற்கு வரும் பள பள சாலைகள் - சிறப்பு தொகுப்பு!
2025ம் ஆண்டு இந்தியாவின் சாலை உள்கட்டமைப்புத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமையப் போகிறது. குறிப்பாக, மூன்று முக்கிய அதிவேக விரைவு நெடுஞ்சாலைகள் இந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சிறந்த உள்கட்டமைப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாகும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து, தேசிய நெடுஞ்சாலைகள், வந்தே பாரத் ரயில்கள், புதிய விமான நிலையங்கள், நவீன துறைமுகங்கள் என சிறந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது.
திட்டங்கள் வெறும் காகிதத்தில் மட்டும் இல்லாமல், திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படுகின்றன. அந்த வகையில், டெல்லி-மும்பை, பெங்களூரு-சென்னை மற்றும் டெல்லி-டேராடூன் ஆகிய மூன்று முக்கிய அதிவேக விரைவு நெடுஞ்சாலை பணிகள் நிறைவுக்கு வந்துள்ளன.
டெல்லி-மும்பை அதிவேக விரைவு நெடுஞ்சாலை, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களை இணைக்கிறது. 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் 1,386 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த நெடுஞ்சாலை அமைக்கப் பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான விரைவு நெடுஞ்சாலை இதுவாகும்.
மேலும், விரைவு சாலையின் ஒரு வழித்தடம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட உள்ளது. இதுவே நாட்டின் முதல் இ-சாலை ஆகும். 8 வழி சாலையாக அமைக்கப்படும் இந்த விரைவு சாலையை 12 வழிசாலையாக விரிவுபடுத்தவும் இடம் தரப்பட்டுள்ளது.
இந்த விரைவு நெடுஞ்சாலை டெல்லி- மும்பை இடையேயான பயண நேரத்தை 50 சதவீதம் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் தளவாடச் செலவை 16 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைப்பதே இந்த விரைவு நெடுஞ்சாலை திட்டத்தின் நோக்கமாகும். அடுத்தபடியாக, பெங்களூரு-சென்னை விரைவு நெடுஞ்சாலை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையிலான இந்த விரைவு நெடுஞ்சாலை 260 கிலோமீட்டர் துாரமாகும். இந்த சாலையை எட்டு வழிச்சாலையாக விரிவுபடுத்த வசதியாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
17,900 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடக்கும் இந்த சாலை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது, சென்னை -பெங்களூரு இடையேயான 6 மணி நேர பயணம், 3 மணி நேரமாக குறையும் என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக, டெல்லி-டேராடூன் விரைவு நெடுஞ்சாலை இன்னும் 3 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
13,000 கோடி ரூபாய் மதிப்பில் டெல்லி - சஹாரான்பூர் - டேராடூன் விரைவு நெடுஞ்சாலை 210 கிலோமீட்டர் தூரத்துக்குச் செல்கிறது. டெல்லி-டேராடூன் இடையேயான ஆறு மணி நேர பயண நேரத்தை இரண்டு மணி நேரமாக இந்த விரைவு நெடுஞ்சாலை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விரைவு நெடுஞ்சாலைகள் எல்லாம் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். இந்த அதிநவீன நெடுஞ்சாலைகள் அனைவருக்கும் விரைவான, பாதுகாப்பான மற்றும் திறமையான பயணத்துக்கு உத்தரவாதம் தருகின்றன.
பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உறுதிப்படுத்தப் படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் உள்கட்டமைப்புக்காக பெரும் தொகை முதலீடு செய்யப் படுகின்றன. சாலை வசதி மேம்படும்போது வர்த்தகம் பெருகுகிறது. வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது.
குறிப்பாக அனைவருக்கும் விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை இந்த விரைவு நெடுஞ்சாலைகள் உறுதிப்படுத்துகின்றன. அடுத்த ஆண்டுக்குள், அமெரிக்காவை விடவும் உயர்ந்த தரத்தில் இந்திய நெடுஞ்சாலைகள் இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.