உலகின் நீளமான ஹைப்பர்லூப் : 30 நிமிடங்களில் சென்னை TO திருச்சி !
மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் ஹைப்பர்லூப் ரயில் வழித்தடத்தின் நேரடி செயல் விளக்கத்தைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்தியா தயாரித்துள்ள ஆசியாவின் மிக நீளமான ஹைப்பர்லூப் ரயில் பாதை விரைவில் உலகின் மிக நீளமானதாக மாறும் என்று தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
உலகின் ஐந்தாவது போக்குவரத்து என்று கூறப்படும் 'ஹைப்பர்லுாப்' ரயில், போக்குவரத்துத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்கப் புரட்சியாகும். ஹைப்பர்லூப் ரயில் என்பது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான அதிவேக ரயில் அமைப்பாகும்.
ஹைப்பர்லூப் என்பது ஒரு குழாயில் வெற்றிடத்தில் இயங்கும் அதிவேக ரயில் ஆகும். 'லுாப்' எனப்படும் குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் போன்ற பகுதியில், பாட் எனப்படும் ரயில் பெட்டி போன்ற கேப்சூல் இயங்கும். ஒரு பெட்டியில் அதிக பட்சம் 28 பேர் வரை பயணிக்க முடியும். ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு, குறிப்பிட்ட இலக்கை அதிவேகமாகச் சென்றடைய முடியும்.
ரயில் பாலங்கள் போலவே, 'ஹைப்பர்லுாப்' ரயில்களுக்கு என பிரத்தியேகமான தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் நீளமான குழாய்கள் அமைக்கப்படும். பயணிகளை ஏற்றுக்கொண்ட கேப்சூல்கள் பொருத்தப்பட்டு, குழாய்களில் செலுத்தப்படும்.
ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் ரயில் பெட்டிகள் போல் இல்லாமல், இந்த ஹைப்பர்லூப் கேப்சூல்கள், சாலைகளில் கார்கள் செல்வது போல தனக்கான பாதையில் ஒன்றன் பின் ஒன்று செல்லக் கூடியவை ஆகும். கேப்சூல்கள் தனித் தனி திசைகளிலோ அல்லது ஒரே திசையில் சேர்த்தோ இயக்க வைக்கலாம் என்றும் கூறப் படுகிறது.
முதன்முதலில், ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை ஸ்விஸ் நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் மார்சல் ஜபர் உருவாக்கினார். 1992-ம் ஆண்டில் ஸ்விஸ்மெட்ரோ நிறுவனம், ஹைப்பர்லூப் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக கோடிக்கணக்கில் செலவிட்டது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2009-ம் ஆண்டில் இந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.
மீண்டும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், இந்த தொழில்நுட்பத்தை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப் படுத்தினார். தற்போது அமெரிக்காவின் வர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனமும் கனடாவின் டிரான்ஸ்பாட் நிறுவனமும்தான் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மெட்ராஸ் ஐஐடி 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் சோதனை குழாயை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளது. ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான சோதனை அமைப்பு முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதான் ஆசியாவிலேயே மிக நீண்ட ஹைப்பர்லூப் சோதனையமைப்பு ஆகும். விரைவில் உலகிலேயே மிக நீளமான ஹைப்பர்லூப் பாதையாக மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஹைப்பர்லூப் திட்டத்துக்கான நிதி உதவியும், தொழில்நுட்ப உதவியும் மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் முழுவதையும் சென்னை ஐசிஎஃப் தயாரித்துள்ளது.
410 மீட்டர் தூரமுள்ள பாரதத்தின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாக, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஹைப்பர்லூப் சோதனைப் பாதையின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த தொழில்நுட்பம், இந்தியாவில் அதிக பட்சம் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஹைப்பர்லூப் திட்டம் நடைமுறைக்கு வந்தால், சென்னையில் இருந்து திருச்சிக்கான, 330 கி.மீ., துாரத்தை வெறும் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும்
பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா பல்வேறு துறைகளிலும் புதிய வேகத்தோடு முன்னேறி வருகிறது. புதிய தொழில்நுட்பங்களை உள்நாட்டில் தயாரித்து உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது.
அந்த வகையில், ஹைப்பர்லூப் ரயில் தொழில்நுட்பம்,பாதுகாப்பான மற்றும் வேகமான போக்குவரத்தை உறுதி செய்கிறது. இதனால், இந்தியாவின் பொருளாதாரம் அசுர வேகத்தில் வளரும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.