குடியரசு தினம் - டெல்லி இல்லத்தில் தேசிய கொடி ஏற்றினார் எல்.முருகன்!
குடியரசு தின;த்தை முன்னிட்டு டெல்லி இல்லத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லி இல்லத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், "இந்தியாவின் அனைத்து தரப்பட்ட மக்களும், சமமான நீதியும், சம உரிமையும் பெற்றிட வேண்டி உருவாக்கப்பட்ட, அரசியலமைப்புச் சாசனம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இந்த அற்புதமான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த 76-வது குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி பெற்ற சுதந்திரம், நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தம் என்று முரசு கொட்டி உலகிற்கு உரக்கச் சொன்ன நாள் இன்று. சகோதரத்துவமும், சமத்துவமும் கொண்ட, உலகின் மிகப்பெரும் ஜனநாயக தேசமான நமது இந்தியத் திருநாட்டில், மக்களாட்சி மலர்வதற்கான அடிப்படை அரசியலமைப்பு கட்டமைப்புகளை உருவாக்கிய அனைத்து தலைவர்கள் மற்றும் தியாகிகளையும் இந்த நன்னாளில் நினைவு கூர்வோம்.
மேலும், நமது மேன்மையான அறிவுத் திறனாலும், கடின உழைப்பினாலும் உலகின் முன்னணி தேசமாக பாரத தேசத்தைக் கட்டமைக்க உறுதியேற்போம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.