For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உலகிலேயே அதிக தங்கம் வாங்கி குவிக்கும் இந்தியப் பெண்கள்!

06:35 PM Dec 31, 2024 IST | Murugesan M
உலகிலேயே அதிக தங்கம் வாங்கி குவிக்கும் இந்தியப் பெண்கள்

உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்தியப் பெண்களிடம் உள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் மொத்த தங்கம் கையிருப்பை விட இந்திய பெண்களிடம் அதிகம் தங்கம் வைத்திருக்கிறார்கள் என்று உலக தங்க கவுன்சிலின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

காலம் காலமாகவே இந்தியாவில் செல்வத்தின் பெருமை மிக்க அடையாளமாக தங்கம் இருந்து வருகிறது. மேலும், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில்,ஒவ்வொரு பாரம்பரியத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தெய்வ அடையாளமாக தங்கம் மதிக்கப் படுகிறது.

Advertisement

குறிப்பாக,இந்தியத் திருமணங்களில் தங்க நகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த இந்திய திருமணமும் தங்கம் பரிசளிக்காமல் முழுமை அடைவதில்லை. தங்கத்தின் மீதான இந்த நீண்டகால பந்தமே , இந்தியப் பெண்களிடம் தங்கம் குவிவதற்கு காரணமாக உள்ளது. பெரும்பாலும், ஒரு குடும்பத்தின் தங்கம், தலைமுறை தலைமுறையாக சேமிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, வீட்டுத் தங்கம் என்ற அளவில், உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலக தங்க கவுன்சிலின் அறிக்கையின்படி, இந்தியப் பெண்கள் மொத்தமாக 24,000 டன் தங்கத்தை வைத்துள்ளனர். இது உலகின் மொத்த தங்க இருப்பில் 11 சதவீதமாகும். உண்மையில், இந்தியப் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு, தங்க கையிருப்பில் முதல் 5 நாடுகளின் மொத்த தங்க இருப்பைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisement

சர்வதேச நாணய நிதியம் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் கையிருப்புகளை விடவும் அளவுக்கு அதிகமான தங்கத்தை இந்தியப் பெண்கள் வைத்துள்ளனர்.

அமெரிக்காவில் மொத்தம் 8,000 டன் தங்கம் உள்ளது. ஜெர்மனியில் 3,300 டன் தங்கம் உள்ளது. இத்தாலியில் 2,450 டன் தங்கம் உள்ளது. பிரான்ஸில் 2,400 டன் தங்கம் உள்ளது. ரஷ்யாவிடம் 1,900 டன் தங்கம் உள்ளது. இந்த 5 நாடுகளின் மொத்த தங்கதை விடவும் இந்தியப் பெண்களுக்குச் சொந்தமான தங்கத்தின் அளவு மிக அதிகமாகும்.

இதில், தென்னிந்தியாவைச் சேர்ந்த பெண்களிடமே அதிகம் தங்கம் உள்ளது. நாட்டின் மொத்த தங்கத்தில் தென்னிந்திய பெண்களிடம் 40 சதவீதம் உள்ளது. அதிலும் பாதிக்கு மேல் தமிழகப் பெண்களிடம் உள்ளது. அதாவது 28 சதவீத தங்கம் தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் உள்ளது.

2020-21 ஆண்டில், 23,000 டன் தங்கத்தை வைத்திருந்த இந்திய குடும்பங்களின் தங்க கையிருப்பு, சென்ற ஆண்டு, 25,000 டன்னாக உயர்ந்துள்ளது என உலக தங்க கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய வருமான வரிச் சட்டங்கள் கூட, தங்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. அதன்படி, திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் திருமணமாகாத பெண்களுக்கான தங்க வரம்பு 250 கிராம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்களுக்கு 100 கிராம் தங்கம் வைத்திருக்க இந்திய அரசு அனுமதிக்கிறது.

இந்நிலையில் சமீப ஆண்டுகளாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில், தங்கத்தின் விலை, 28 சதவீதம் உயர்ந்து அசுர வளர்ச்சியை அடைந்தது என்பது குறிப்பிடத் தக்கது. மத்திய அரசின் 15 சதவீத இறக்குமதி வரியும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 15 சதவீதம் என்பதிலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான வரியை 6.4 சதவீதமாகவும் குறைக்கப் பட்டது.

தங்கத்தின் மீதான வரி குறைப்பு அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே தங்கத்தின் விலை கணிசமாக குறைந்தது.

உலக தங்கத் தேவையில் 60 சதவீதம் ஆசியாவில் உள்ளது. அதிலும் இந்தியாவும் சீனாவும்தான் தங்க சந்தைகளில் முன்னணியில் உள்ளன.

இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 800 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது.

இந்தியாவில் தங்கத்துடன் தொடர்புடைய நிதி முதலீடுகள் அதிகரித்துள்ளன. இப்படி நாட்டின் பொருளாதாரத்துக்கும் தங்கம் வலிமை சேர்க்கிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

முக்கியமாக, மற்ற நாடுகளில் ஒரு முதலீடாக மட்டுமே பார்க்கப்படும் தங்கம், இந்தியாவில் ஒரு பாரம்பரிய சொத்தாகவும், தெய்வ அனுக்கிரகத்தின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement