உலக அளவில் நிலையான, வலிமையான பிரதமராக மோடி - பாஜக பெருமிதம்!
கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் தலைமைகள் மாறியபோதும், நிலையான மற்றும் வலிமையான பிரதமராக நரேந்திர மோடி நீடித்து வருவதாக பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியை அல்டிமேட் பிக்பாஸ் என்று சித்தரிக்கும் ஒரு விளக்கப்படத்தை எக்ஸ் வலைதளத்தில் பாஜக பகிர்ந்துள்ளது. அதில், உலகின் வல்லரசு நாடாக கருதப்படும் இங்கிலாந்தில் கடந்த 10 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் மாறியுள்ளதாகவும், ஆஸ்திரேலியா 3 பிரதமர்களால் மாற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளிலும் பிரதமர்கள் மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பாஜக, கனடாவும் 2 பிரதமர்களின் மாற்றத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் பொருளாதார பலம் வாய்ந்த பல நாடுகளின் பிரதமர்கள் பலமுறை மாறியபோதும், இந்தியாவில் இன்னும் நிலையான மற்றும் வலிமையான பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார் என பாஜக புகழாரம் சூட்டியுள்ளது.