உலக நாடுகளை மிரட்டும் இந்தியாவின் அசுரன் ‘நாகாஸ்திரா-1’
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘நாகாஸ்திரா-1’ ட்ரோன்களின் முதல் தொகுதி இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-காசா, ஆர்மீனியா-அஜர்பைஜான் போர்கள் நடைபெற்றுவரும் சூழலில், ட்ரோன் தொழில்நுட்பம் ஒரு வலிமைமிக்க போர் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியா உள்நாட்டிலேயே ஆளில்லா ட்ரோன் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது.
வெடிமருந்துகளை சுமந்து சென்று எதிரிகளின் முகாம்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த வகை ட்ரோன்கள் சூசைட் ட்ரோன் அதாவது தற்கொலை ட்ரோன் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா தனது புதிய ஆளில்லா ட்ரோனுக்கு நாகாஸ்திரா என்று பெயர் வைத்துள்ளது.
2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்திய இராணுவத்திற்கு unmanned aerial vehicles எனப்படும் 'ஆளில்லா ஆகாயவாகன' (UAV) நாகாஸ்திராவை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை சோலார் இண்டஸ்ட்ரீஸ் பெற்றது.
ட்ரோன்களைத் தயாரிக்கும் பணிகளை விரைவாக முடித்து, 120 நாகாஸ்திரா ட்ரோன்களை முதல் தொகுதியாக இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான( Economics Explosives Ltd) எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனமும் பெங்களூரூவைச் சேர்ந்த Z-Motion நிறுவனமும் சேர்ந்து இந்த இந்த ட்ரோனை உருவாக்கியுள்ளன.
நாகாஸ்திரா ட்ரோன்கள் இலக்கை நோக்கிச் செல்லும் திறன் காரணமாக, அவை அலையும் ஆயுதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எந்த இலக்கையும் மோதச் செய்து அதைத் தேடி அழிக்க முடியும் என்றும் இந்த ட்ரோன்களைப் பயன்படுத்துவதால், ராணுவ வீரர்களின் உயிருக்கு ஆபத்து முற்றிலுமாக தடுக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
பயன்பாட்டில் உள்ள மற்ற ட்ரோன்களைப் போலல்லாமல் தேவைப்படும்போது, இந்த நாகாஸ்திரா தானாகவே தாக்குதலை நிறுத்திக் கொள்ளும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் முறையில் 2 மீட்டர் வரை உள்ள எந்தவொரு இலக்கையும், துல்லியமாக கண்டறிந்து தாக்கக் கூடிய இந்த நாகாஸ்திராவை, எந்த ரேடராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும், இலக்கு கண்டறியப்படாவிட்டால் செயல்பாட்டை நிறுத்தி, பாராசூட்டை பயன்படுத்தி தரையிறக்கம் செய்து, அதே நாகாஸ்திராவை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபயன்பாட்டு அம்சங்களில் முன்னேறிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ட்ரோன்களை விட, பல அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட இந்த நாகாஸ்திரா இந்தியாவின் தொழிநுட்ப சாதனை என்று கூறுகிறார்கள்.
மேலும், பூமியில் இருந்து, 4,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பறக்கக்கூடிய இந்த நாகாஸ்திரா, பகல்-இரவு எந்நேரமும் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள், மற்றும் வெடிமருந்துகளை தாங்கிச் செல்லும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
2023ம் ஆண்டில், புதுதில்லியில் நடைபெற்ற ராணுவத் தளபதிகள் மாநாட்டில் 'நாகஸ்த்ரா -1' மாதிரி வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் முதல் முதலாக விளக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.