"எங்கும் கொலை" : திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல - இபிஎஸ் குற்றச்சாட்டு!
"எங்கும் கொலை; எதிலும் கொலை" என்றும், திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : திருநெல்வேலி நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி!
இதுமட்டுமின்றி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் செய்திகளில் வந்தவை:
●சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு
●சிவகங்கையில் தாயின் கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை
●சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து.
"தனிப்பட்ட கொலைகள்" என்று இன்னும் எத்தனை நாட்கள் தான் ஸ்டாலின்
திமுக அரசு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடந்து செல்லப் போகிறது? நிர்வாகத் திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம்.
மேற்சொன்ன குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், போட்டோஷூட்டிலும், மடைமாற்று அரசியலிலும் மட்டுமே செலுத்தும் கவனத்தை தனது முதல் பணியான சட்டம் ஒழுங்கை காப்பதிலும் செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.