எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு!
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Advertisement
அதிமுக விதிகளில் திருத்தம் செய்தது, தலைமை மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக புகழேந்தி, கே.சி.பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்குக்கு எதிராக தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தாங்கள் எந்த அதிகார வரம்பு மீறலிலும் ஈடுபடவில்லை என விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.