செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட் 2025 : ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

06:05 AM Jan 24, 2025 IST | Murugesan M

பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய மத்திய பட்ஜெட்டில் ஜவுளித்துறை மீது தனி கவனம் செலுத்தி, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என திருப்பூர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

Advertisement

சர்வதேச சந்தையில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 55 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் ஜவுளி உற்பத்தியில் முதன்மை இடத்தில் செயல்பட்டு வருகிறது.

Advertisement

குறிப்பாக பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி மூலம் ஆண்டுக்கு ஏறக்குறைய 70 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டித்தரும் தொழில் நகரமாக விளங்குகிறது திருப்பூர்.

திருப்பூரில் 1930-ம் ஆண்டு ஒரே ஒரு பின்னலாடை இயந்திரத்துடன் தொடங்கிய ஜவுளி உற்பத்தி, 1980-ம் ஆண்டு 50 கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடை துணிகளை ஏற்றுமதி செய்தது. இந்த வளர்ச்சி கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகத்தையும், 35 ஆயிரம் கோடி உள்நாட்டு உற்பத்தி வர்த்தகத்தையும் எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டுகளில் பருத்தி தட்டுப்பாடு, நிலையில்லாத நூல் விலை உயர்வு, கன்டெய்னர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு கட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டது ஜவுளித்துறை. தொடர்ந்து உற்பத்தியாளர்கள் செயற்கை இழைகளுக்கு மாறத் தொடங்கிய நிலையில், உற்பத்தி செலவு அதிகரித்ததால் உள்நாட்டு வர்த்தகம் பெருமளவு சரிந்தது.

இருந்தபோதிலும் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் மீண்டும் ஏற்றம் கண்டுள்ள ஜவுளித்துறை வர்த்தகம், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 12 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு கடந்த ஆண்டைப்போல அல்லாமல், ஜவுளித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில்துறையினர் இடையே அதிகரித்துள்ளது.

குறிப்பாக புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய இயந்திரங்கள் வாங்க மானியம், பசுமை தொழிற்சாலைகளை ஊக்குவிக்க சிறப்பு ஊக்கத் தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஜவுளி உற்பத்தியில் 6-ம் இடத்தில் உள்ள இந்தியா முன்னிலை வகிக்கும் பிற நாடுகளுடன் போட்டிபோட முடியாததற்கு, அரசின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் எனக்கூறும் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளித்துறைக்கு என தனி வாரியம் அமைத்திடவும், வங்கிகள் எளிய முறையில் கடனுதவி வழங்கிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

வங்க தேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில், பல புதிய ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளதால் ஜவுளித்துறை மீது அரசு தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா மத்திய பட்ஜெட்? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement
Tags :
Anticipated Union Budget 2025New announcementstextile industryunion budget highlightsFEATUREDMAINbudgetunion budget 2025union budget 2025 dateunion budget 2025 income taxunion budget
Advertisement
Next Article