எரிவாயு நெருக்கடியில் ஐரோப்பிய நாடுகள் : கைவிரித்த ரஷ்யா, கத்தார் நாடுகள் - சிறப்பு கட்டுரை!
குளிர்காலம் தொடங்கிய நிலையில் கத்தார் மற்றும் ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக அச்சுறுத்தி வருவதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதை அடுத்து, ரஷ்யா மீது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. எனவே, எரிவாயு ஆற்றலுக்காக ரஷ்யாவை நம்பி இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கத் தொடங்கின.
இந்நிலையில், கத்தார் ஐரோப்பிய நாடுகளுக்குத் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் முக்கியமான விநியோகஸ்தராக மாறியது. கத்தார் அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான QatarEnergy, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்துடன் நீண்ட கால LNG விநியோக ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.
இந்தச் சூழலில், கடந்த ஜூலை மாதம், (The Corporate Sustainability Due Diligence Directive ) கார்ப்பரேட் சஸ்டைனபிலிட்டி டூ டிலிஜென்ஸ் டைரக்டிவ், என்ற சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்தது.
இந்த சட்டத்தின் படி, நிறுவனங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகள் முழுவதும் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடாமுயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
முக்கியமாக, இந்த உத்தரவு ஐரோப்பியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும். ந்தச் சட்டத்தை மீறும் நிறுவனத்தின் வருடாந்திர உலகளாவிய வருவாயில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் அனைத்தும் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் தங்கள் தேசிய சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்கு அடுத்த ஆண்டில், நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கத்தார் எனர்ஜியின் தலைமை நிர்வாகியான அல்-காபி, கத்தார் எனர்ஜி போன்ற நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த சட்டம், செயல்படுத்த முடியாத ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டால், ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தப் போவதாக கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
ரஷ்யாவிலிருந்து எரிவாயு வருவது குறைந்துவிட்ட நிலையில், இப்போது கத்தாரும் எரிவாயு விநியோகம் இல்லை என்று எச்சரித்து இருப்பது, ஐரோப்பிய நாடுகளில் கடும் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவிலிருந்து உக்ரைன் மூலமாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், உக்ரைன் முழுவதும் ரஷ்ய எரிவாயுவை அனுப்புவதற்கான ஐந்தாண்டு ஒப்பந்தம் இந்த மாத கடைசியில் முடிவடைகிறது.
இதற்கிடையே, இந்த மாத தொடக்கத்தில், எரிவாயு போக்குவரத்து ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என்று, ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
ரஷ்யாவிருந்தும் எரிவாயு வராது, கத்தாரில் இருந்தும் கிடைக்காது என்ற நெருக்கடியான நிலையில், எரிவாயு-வுக்கு மாற்று வழிகளைத் தேடத் தொடங்கி உள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக அமெரிக்கா உள்ளது. மேலும் அதன் ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அதிக அளவில் அமெரிக்காவே அனுப்புகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ட்ரம்ப், அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகமாக வாங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவின் குளிர் காலத்தில் எரிவாயு சேமிப்பு மட்டுமே உயிர்நாடியாகக் காணப்படுகிறது.தங்கள் நாட்டின் எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க, ஏற்கெனவே ஆஸ்திரியா அதிபர் கார்ல் நெஹாம்மர் மற்றும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் ரஷ்யாவுக்குச் சென்று, ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து எண்ணெயைத் தொடர்ந்து வாங்குவதற்காக, கடந்த வாரம், Slovak ஸ்லோவாக் பிரதமர் ராபர்ட் ஃபிகோ, ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பை ஐரோப்பிய ஒன்றியம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றியத்திலும் விரிசல்களை கொண்டு வந்து விட்டது.