ஒன்று முதல் 5-ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே இறுதித்தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரகம்
தமிழகத்தில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
Advertisement
தமிழகத்தில் அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வரை மூன்றாம் பருவத் தேர்வு, ஆண்டு இறுதி தேர்வு ஆகியவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. இதனால் முழு ஆண்டுத் தேர்வை முன்கூட்டியே நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் அதனை ஏற்ற தொடக்கக் கல்வி இயக்குநரகம், வருகின்ற ஏப்ரல் 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது. முன்கூட்டியே தேர்வு முடிவடைய உள்ளதால் மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.