’ஒரே நாடு ஒரே சப்ஸ்க்ரிப்ஷன்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை எளிதில் படித்து பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படவுள்ள ’ஒரே நாடு ஒரே சப்ஸ்க்ரிப்ஷன்’ என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement
ஆறாயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம்,
நாடு முழுவதும் ஆராய்ச்சிப் படிப்புகள் தொடர்பான கட்டுரைகள், கல்வி இதழ்கள், புத்தகங்களை இணைய வழியில் படித்துப் பயன்பெற முடியும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டுரைகளை இணைய வழியில் எளிதாக படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறையின் ‘ஒரே நாடு ஒரே சப்ஸ்க்ரிப்சன்’ என்ற ஒருங்கிணைந்த தளத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்குத் தேவையான கட்டுரைகளை மாணவர்களும் பேராசிரியர்களும் படித்து பயன்பெற முடியும்.
மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களும் இத்திட்டத்தால் பயனடையும் அந்த வகையில் ஆறாயிரத்து 300 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடியே 80 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், இத்திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பொறுப்பை மத்திய பல்கலைக் கழக மானியக் குழுவால், பல்கலைக் கழகங்களுக்கு இடையே நூலகங்களை நிர்வகிக்க உருவாக்கப்பட்டுள்ள ‘தகவல் மற்றும் நூலக வலையம் ஒருங்கிணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.