ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்!
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கான இரு மசோதாக்களை மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இதில் முதல் மசோதா மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், இரண்டாவது மசோதா யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தவும் வழிவகை செய்கிறது.
இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக பேசிய அமித்ஷா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார்.
மேலும், கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் எனவும் அமித்ஷா கூறினார். இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது.