ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! : மக்களவையில் காரசார விவாதம்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்கட்சிகள் எதிர்ப்பால் காரசார விவாதம் நடைபெற்றது.
Advertisement
மக்களவை, மாநிலங்களவை மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறையை மத்திய அரசு திட்டமிட்டது. இதையடுத்து, இந்த மசோதாக்களுக்கு கடந்த 12-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்தார்.
மசோதாவுக்கு தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவையில் பேசிய காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி, ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் மசோதாவை அறிமுக நிலையிலேயே நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது என தெரிவித்தார். மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.