ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வழிவகை செய்யும் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Advertisement
மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் வெவ்வேறு தேதிகளில் தேர்தல் நடைபெறுவதால், அதற்கான செலவைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அந்த வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை முன்மொழிந்த மத்திய அரசு, இதையொட்டி முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து ஆய்வு செய்தது.
அந்தக் குழு விரிவான ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்த நிலையில், அதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2029-ஆம் ஆண்டுக்குள், அதாவது அடுத்த மக்களவைத் தேர்தலின்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.