’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா! : நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!
’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இன்று தாக்கல் செய்கிறார்.
மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் வெவ்வேறு தேதிகளில் தேர்தல் நடைபெறுவதால் அதற்கான செலவைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அந்த வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முன்மொழிந்த மத்திய அரசு, இதையொட்டி முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து ஆய்வு செய்தது.
அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
எனவே, பாஜக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் அவையில் ஆஜராக வேண்டும் என, கட்சியின் தலைமைக் கொறடா சஞ்சய் ஜெய்ஸ்வால் அறிவுறுத்தியுள்ளார்.