ஒரே வாரத்தில் வழுக்கையாகும் தலை : மர்ம நோய் காரணமா? பீதியில் கிராம மக்கள் - சிறப்பு தொகுப்பு!
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில், புதிய மர்ம நோய் வேகமாகப் பரவி வருகிறது. கிராம மக்களின் தலையில் இருந்து வேக வேகமாக முடி உதிர்ந்து விழுகிறது. முடி விழ ஆரம்பித்து விட்டால், ஒரே வாரத்தில், தலை வழுக்கையாகி விடுகிறது. மக்கள் மத்தியில் இது, அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முடி உதிர்வுக்கு என்ன காரணம் ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் ஷெகான் தாலுகாவில் போர்கான், கல்வாட் மற்றும் ஹிங்னா கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராம மக்கள் புதுவிதமான ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
அதாவது, தலை முடியை லேசாக இழுத்தால் கூட, உடனடியாக முடி கொட்டி விடுகிறது. ஓரே வாரத்துக்குள் மொத்தமாக முடி கொட்டி, தலை வழுக்கை ஆகிறது. என்ன பிரச்னை ? எதனால் முடி கொட்டுகிறது ? என்று மக்கள் தெரிந்து கொள்வதற்கு முன், தலை முழுவதும் வழுக்கையாவதால், மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
ஆண் ,பெண் என வித்தியாசமில்லாமல், இளம் வயதினர் தொடங்கி முதியவர்கள் வரை அனைவருக்கும் இந்த முடி கொட்டும் பிரச்னை எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள், இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிராமங்களுக்குச் சென்ற சுகாதாரக் குழு, சுமார் 50 பேர் ஏற்கெனவே, இந்த முடி உதிரும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்களும் கவலைத் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப் பட்ட மக்களுக்கு உடனடி சிகிச்சைகளும், தோல் பராமரிப்பு ஆலோசனைகளும் வழங்கப் படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரைச் சுட வைத்துப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.
திடீர் முடி உதிர்தலுக்கான காரணத்தைக் கண்டறிய மாநில சுகாதாரத் துறை விசாரணையைத் தீவிரப் படுத்தியுள்ளது. இந்த பிரச்சினை உரம் காரணமாக மாசுபட்ட தண்ணீரால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஷேகான் தாலுகா சுகாதார அதிகாரி டாக்டர் தீபாலி ரஹேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறிப்பிட்ட இந்த மூன்று கிராமங்களில், விநியோகம் செய்யப்படும் தண்ணீரையும், முடி மாதிரிகளையும் சோதனை செய்து வருவதாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலை வழுக்கையான மக்களில் 99 சதவீதம் பேருக்கு, உச்சந்தலையில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் முடி உதிர்வதாகவும் மருத்துவ ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
முடி உதிர்தலுக்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த பிரச்சனையைத் தீர்ப்பதில், அரசு சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். பரிசோதனைகள் முடிவுகள் வந்தபின்தான், திடீர் முடி கொட்டுவதற்கான காரணங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மூன்று கிராம மக்களும் யாருக்கு எப்போது முடி உதிருமோ என்ற அச்சத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர்.